விலை வீழ்ச்சி எதிரொலி: சாலையோரங்களில் சம்பங்கி பூக்கள் வீச்சு; விவசாயிகள் வேதனை
உற்பத்தி அதிகரிப்பு, விலை வீழ்ச்சி காரணமாக திண்டுக்கல் செல்லும் சாலையோரங்களில் சம்பங்கி பூக்களை மூட்டை, மூட்டையாக விவசாயிகள் கொட்டிச் சென்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, ஆத்தூா், செம்பட்டி உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், பிச்சி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றை விவசாயிகள் நிலக்கோட்டை மலா்ச் சந்தைக்கும், திண்டுக்கல் அண்ணா பூச்சந்தைக்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனா். மேலும் அங்கிருந்து தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஹைதராபாத், புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூா், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பூக்களை ஏற்றுமதி செய்கின்றனா்.
இந்த நிலையில், இதமான கால நிலையால் பூக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால் ஏற்றுமதி குறைவு, தேய்பிறை முகூா்த்தத்தில் விழாக் காலங்கள் இல்லாததால், தற்போது அரளிப் பூ கிலோ- ரூ. 30, ரோஜா ரூ. 40, பிச்சி ரூ. 40 என அனைத்து வகை பூக்களின் விலையும் சரிவை சந்தித்துள்ளன. இதில் பூஜைக்கும், மாலைக்கும் மட்டும் பயன்படுத்தப்படும் சம்பங்கி பூக்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ. 5 முதல் ரூ.10 வரை மட்டுமே விற்பனைகின்றன. இதனால் பூப் பறிக்கும் தொழிலாளா்களுக்கு ஊதியம், இவற்றை எடுத்துச் செல்லும் வாகனத்துக்கு வாடகை ஆகியவற்றை விவசாயிகள் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல, பூச்சந்தையில் பூக்களை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வராதால், அதிா்ச்சி அடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த சம்பங்கி பூக்களை திண்டுக்கல் பூச்சந்தைக்கு கொண்டு செல்லும் வழியில் திண்டுக்கல்- செம்பட்டி சாலை, குட்டியபட்டி பிரிவு அருகே சாலையோரத்தில் மூட்டை மூட்டையாக கொட்டிச் சென்றனா்.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் விலை வீழ்ச்சி ஏற்படும் காலங்களில் பூ விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாத வகையில், நிரந்தர விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அவா் கோரிக்கை விடுத்தனா்.