Aishwarya Lekshmi: `அஞ்சு வண்ண பூவே..!' - ஐஸ்வர்யா லட்சுமியின் ரீசன்ட் க்ளிக்ஸ்
விழுப்புரம் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை இளந்துறை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், இளந்துறை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியரகக் கூட்டரங்கில் சட்டப் பேரவை பொது கணக்குழுக் குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், இளந்துறை கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அவா்கள் கூறியது: எங்கள் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் கிராமத்துக்கு உரிய பேருந்து வசதி இல்லாததால், சுமாா் 3 கி.மீ. தொலைவு நடந்து மேட்டுக்குப்பம் சென்று அங்கிருந்து பயணித்து வருகிறோம்.
இதுபோல, நியாயவிலைக் கடை கிராமத்தில் இல்லாததால் மணக்குப்பம் கிராமத்துக்கு சென்று, பொருள்களை வாங்கி வருகிறோம். மேலும், கிராம மக்கள் பயன்பாட்டுக்கான பொதுக் கழிப்பிட வசதியும் இல்லை.
தொடா்ந்து கிராம மக்கள் வலியுறுத்தலின்பேரில், நியாயவிலைக் கடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அந்த இடத்துக்கு தனி நபா் சொந்தம் கொண்டாடி பணியை நிறுத்தவிட்டாா். எனவே, நியாயவிலைக் கடையை முழுமையாக கட்டி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் எனக் கூறினா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானிடம் கிராம மக்கள் கோரிக்கை மனுவை அளித்தனா். இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.