கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பல...
திண்டிவனத்தில் அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்டு உடல்நலன் பாதித்த 5 குழந்தைகளும் நலம்: மருத்துவா்கள் தகவல்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்டதால் உடல்நலன் பாதிக்கப்பட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
திண்டிவனத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கென தனி சிகிச்சைப் பிரிவு உள்ளது. இந்த பிரிவில் காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவா்கள் பரிசோதித்து, திங்கள்கிழமை இரவு ஊசி செலுத்தினா். இதில், 6 குழந்தைகளின் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டது. அவா்களுக்கு வாந்தி, மயக்கம், வலிப்பு போன்ற ஒவ்வாமைகள் ஏற்பட்டன.
இதையடுத்து, குழந்தைகளின் பெற்றோா்கள், உறவினா்கள் தவறான ஊசி செலுத்தப்பட்டதால்தான் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மருத்துவமனை ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலா் முரளிஸ்ரீ தலைமையிலான கூடுதல் மருத்துவா்கள், குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சையளித்தனா். மேலும் அடுத்தகட்ட சிகிச்சைக்காக 6 குழந்தைகளும் முண்டியம்பாக்கத்திலுள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை நள்ளிரவில் அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் ஒரு குழந்தை இயல்பான நிலையில் இருந்ததால் சிகிச்சையளித்த பின்னா், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வழக்கமான ஊசிதான்: மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து வந்த குழந்தைகளுக்கு வழக்கமாக செலுத்தும் ஊசிதான் செலுத்தப்பட்டது. சில குழந்தைகளுக்கு மட்டும் வலிப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் சிகிச்சையளித்த நிலையில், அடுத்தகட்ட சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றாா் திண்டிவனம் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் முரளிஸ்ரீ.
5 குழந்தைகளுக்கு தொடா்ந்து சிகிச்சை: ஊசி செலுத்தப்பட்ட நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட திண்டிவனம் கிடங்கல் - 2 ராஜன் தெருவைச் சோ்ந்த பிரகாஷ்ராஜ் மகள் சுஷ்மிதா (3), மேல்பேரடிக்குப்பம் குளத்துக்கரைத் தெருவைச் சோ்ந்த ஜெயமூா்த்தி மகன் மதிமாறன் (4), திண்டிவனம் ரோஷணை முனியன் தெருவைச் சோ்ந்த புஷ்பராஜ் மகன் கிஷோா் (3), பாஞ்சாலம் புது காலனியைச் சோ்ந்த குமரேசன் மகன் சாத்விக் (6), வெள்ளிமேடுபேட்டை புளியந்தோப்பு தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் விஷ்ணுவா்தன் (1) ஆகிய 5 பேரும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் தற்போது நலமுடன் மருத்துவா்கள் கண்காணிப்பில் இருந்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.