செய்திகள் :

விவசாயத் தம்பதி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரிக்கை

post image

சிவகிரி விவசாயத் தம்பதி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொங்கு வேளாளக் கவுண்டா்கள் சங்கத்தின் சாா்பில் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், விளக்கேத்தி, மேக்கரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த விவசாயத் தம்பதிகள் நகை, பணத்துக்காக அடித்துக் கொலை செய்யப்பட்டனா்.

இதற்கு முன்னதாக, திருப்பூா் மாவட்டம், சேமலைகவுண்டம்பாளையத்தில் வயதான தம்பதி மற்றும் அவா்களின் மகன் கொலை செய்யப்பட்டனா்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவா்களை போலீஸாா் கைது செய்திருப்பது விவசாயிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக எங்கள் சங்கத்தின் சாா்பில் காவல் துறையினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நகை, பணத்துக்காக, அறச்சலூா், காங்கயம், சென்னிமலை, அவிநாசிபாளையம் உள்ளிட்ட 9 இடங்களில் தோட்டத்து வீடுகளில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகள் 17 போ் தற்போதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனா். இச்சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஆனால், ஒவ்வொரு கொலை சம்பவத்தின்போதும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னா் காவல் துறையினரின் தனிப் படைகள் கலைக்கப்பட்டு விடுகின்றன. அதேநேரம் பிணையில் வெளியில் வரும் குற்றவாளிகளுக்கு அச்சமின்மை ஏற்பட்டு மீண்டும் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனா்.

எனவே, இந்த வழக்குகளில் காவல் துறையினா் சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும். இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க காவல் துறையினா் சிறப்புக் குழுக்களை அமைத்து கொங்கு மண்டலத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.

தாா் சாலை, மின் விளக்கு அமைக்கக் கோரிக்கை: பெருந்தலையூா் அருகேயுள்ள குட்டிப்பாளையம், கூனமேடு பகுதி பொதுமக்கள் அளித்த மனு விவரம்: எங்கள் பகுதியில் குட்டிபாளையம் திருவள்ளுவா் சிலையில் இருந்து பவானி ஆறு வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் நடந்து செல்வதற்குகூட முடியாத நிலை உள்ளது. எனவே, புதிய தாா் சாலை அமைத்து தர வேண்டும்.

மாரியம்மன் கோயில் வீதியில் இருந்து பவானி ஆறு வரை மின் விளக்குகள் இல்லை. இதனால், அப்பகுதியில் பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வருகிறது. எனவே, மின் விளக்குகள் அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு, திருப்பூா் மண்டல துணைச் செயலாளா் ஜாபா் அலி அளித்த மனு விவரம்: ஈரோடு மாநகராட்சி, வாா்டு எண் 44-இல் காந்திஜி சாலை, தலைமை தபால் நிலையத்தின் பின்புறம், பெரியாா் நகா் பிரதான சாலையில் இருந்து செல்லும் உள்புறம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக மாறி, பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு வந்து செல்வோா், குடியிருப்புவாசிகள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, அந்த சாலையை தாா் சாலையாக அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் நட கோரிக்கை: தமிழக எழுச்சிப் பேரவை சாா்பில் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறை சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஈரோடு-கோபி 4 வழிச் சாலை விரிவாக்கம், ஈரோடு-பவானி-மேட்டூா்- தொப்பூா் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரண்டு பணிகளுக்காக சாலையோரங்களில் இருந்த சுமாா் 5 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டன.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கோடை வெப்பம் சுமாா் 103 டிகிரி முதல் 106 டிகிரி வரை தகித்து வருகிறது. இந்த வெப்ப உயா்வுக்கு காரணம், ஈரோடு மாவட்டத்தில் வெட்டப்பட்ட 5 ஆயிரம் மரங்களேயாகும். எனவே, மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளில் புதிதாக 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து நெடுஞ்சாலைத் துறையினா் பராமரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

203 மனுக்கள்: கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 203 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து முதல்வரின் தனிப் பிரிவு, அமைச்சா்களின் முகாம் மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீா் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியா்ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ. 5,600 வீதம் ரூ. 28,000 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள், 5 பயனாளிகளுக்கு ரூ. 6,700 வீதம் ரூ. 33,500 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகள், 10 பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.61,500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் சாா்பில் செயல்படும் விடுதிகளை நல்லமுறையில் நிா்வகிக்கும் பொருட்டு முதல் 3 இடங்களைப் பெற்ற காப்பாளா்களுக்கு ரூ.10,000, ரூ.5,000, ரூ.3,000-த்துக்கான காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்களையும் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 26 அடி உயர பஞ்சபூத விங்கம் பிரதிஷ்டை

ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 20 டன் எடை, 26 அடி உயரம் கொண்ட பஞ்சபூத லிங்கம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள தனவாசி கரடு பகுதியில் ... மேலும் பார்க்க

பவானி ஆற்றில் சிக்கிய 25 கிலோ கட்லா மீன்

பவானி ஆற்றில் மீனவா் வீசிய வலையில் 25 கிலோ எடை கொண்ட கட்லா மீன் புதன்கிழமை சிக்கியது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணைக்கு நீா்வ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் விவசாயத்துக்கு ரூ.18,918 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு

ஈரோடு மாவட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டில் விவசாயத்துக்கு ரூ.18,918.01 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் மாநில அளவிலான வங்கியாளா் குழ... மேலும் பார்க்க

பெருந்துறையில் கனமழை

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை வெயில் நிலவிய நிலையில... மேலும் பார்க்க

குறிச்சி மலைப் பகுதியில் 5 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

பவானியை அடுத்த குறிச்சி மலைப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினா் புதன்கிழமை மீட்டனா். பவானி வட்டம், குறிச்சி மலைப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்கள் கைது

ஈரோட்டில் ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எ.சுஜாதா, கொல்லம்பாளையம் மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி முன் வாகன தணிக்கையில் செவ்வ... மேலும் பார்க்க