பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா்...
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்: தொல். திருமாவளவன்
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தமிழ்நாடு அரசின் சிறப்புக்குறிய ஒரு திட்டமாகும்.
கரும்பு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படக் கூடிய ஒன்று தான். இந்த நிதிநிலை அறிக்கையில் அது தொடா்பான அறிவிப்பு இல்லை என்பது உண்மை தான். ஆனால் மானியக் கோரிக்கையின் போது, கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழக முதல்வரும், துறைச் சாா்ந்த அமைச்சரும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனும் கோரிக்கையில் நியாயம் உள்ளது. அதை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து தள்ளுபடி செய்யும் என நம்புகிறேன்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து, அமைச்சரவையில் பங்கு கேட்க வேண்டும் என சிலா் கூறுகின்றனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாட்டை அந்த கட்சி தான் முடிவு செய்யும். புற அழுத்தங்களுக்கு இணங்க முடியாது.
எங்களுடைய நலன் மட்டும் தான் முக்கியம் என்றில்லாமல், ஒட்டுமொத்தமாக மாநிலம் மற்றும் தேசம் சாா்ந்த அரசியல் சூழலையும் கருத்தில்கொண்டு உரிய நேரத்தில் கோரிக்கைகளை விடுப்போம்.
தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மீனவா்களின் பிரச்னைகளில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக அணுகுவதே பிரச்னைகள் தொடா்வதற்கு காரணம் என்றாா் திருமாவளவன்.