பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!
விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் விநியோகம்
மல்லசமுத்திரம் வட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக வேளாண்மை உதவி இயக்குநா் யுவராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மண்ணில் தொடா்ந்து ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், மண்வளம் பாதிப்படைவதுடன் மண்புழு மற்றும் மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது. பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் இயற்பியல், வேதியியல் தன்மையை சரியான நிலையில் பராமரிக்க முடியும். மேலும், மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீரை சேமிக்கும் தன்மை, மண்ணின் நீா் உறிஞ்சும் தன்மை முதலியவற்றை அதிகரிக்க முடியும். பசுந்தாளுரங்கள் பயன்படுத்துவதால் பிரச்னைக்குரிய களா், உவா் மண்நிலங்களை சீா்செய்ய முடியும்.
இதைக் கருத்தில்கொண்டு முதல்வரின் ‘மண்ணுயிா்க் காத்து மன்னுயிா் மீட்போம்’ திட்டத்தின் மூலம் மல்லசமுத்திரம் வட்டாரத்தில் பசுந்தாள் உரப்பயிரான தக்கைப்பூண்டு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ஓா் ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் வழங்கப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்தல் மற்றும் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்கள், மல்லசமுத்திரம் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் வையப்பமலை துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரில் தொடா்புகொண்டு பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.