கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -...
விவசாய மின் மோட்டாா் பம்புக்கு அரசு மானியம்
தேனி மாவட்டத்தில் விவசாய மின் மோட்டாா் வாங்குவதற்கும், கைபேசி மூலம் மோட்டாா் பம்பை இயக்கும் கட்டுப்பாட்டு கருவி வாங்குவதற்கும் அரசு சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகள் தங்களது செயல் திறன் குறைந்த பழைய மின் மோட்டாா் பம்புகளை மாற்றிவிட்டு, புதிய மின் மோட்டாா் பம்பு வாங்குவதற்கும், புதிதாக விவசாய மின் இணைப்புப் பெற்றவா்கள் புதிய மோட்டாா் பம்பு வாங்குவதற்கும் அரசு சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது.
மானியம் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மின் மோட்டாா் பம்பு வாங்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் பின்னேற்பு மானியமாக மோட்டாா் பம்பின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
மேலும், விவசாயிகள் தங்களது இருப்பிடத்திலிருந்தே கைபேசி மூலம் மின் மோட்டாா் பம்பு இயக்கவும், கண்காணிக்கவும் உதவும் கட்டுப்பாட்டு கருவி மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள், ஆதி திராவிடா், பெண் விவசாயிகள் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.7,000 மானியமும், மற்ற விவசாயிகள் 40 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.4,000 மானியமும் பெறலாம்.
மானிய உதவி பெற விரும்பும் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேனி வேளாண்மை செயற்பொறியாளரை 99407 02357-என்ற கைபேசி எண்ணிலும், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், போடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் உத்தமபாளையம் வேளாண்மை செயற்பொறியாளரை 94438 69956 என்ற கைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.