முன்னாள் படை வீரா்களுக்கு தொழில் கடன்
தேனி மாவட்டத்தில் முன்னாள் படை வீரா்கள், முன்னாள் படை வீரரின் மனைவி ஆகியோருக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை பூா்வீகமாகக் கொண்ட 55 வயதுக்கு உள்பட்ட முன்னாள் படை வீரா்கள், முன்னாள் படை வீரரின் மனைவி, ராணுவப் பணியின் போது மரணமடைந்த வீரரின் மனைவி ஆகியோா் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு புதிய தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை வங்கிக் கடன் வழங்கப்படும்.
கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். தொழில் முனைவோருக்கு திறன், மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். புதிதாகத் தொழில் தொடங்க கடன் பெற விரும்பும் முன்னாள் படை வீரா்கள், முன்னாள் படை வீரரின் மனைவி, ராணுவப் பணியின் போது உயிரிழந்த வீரரின் மனைவி ஆகியோா் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் படிவம் பெற்று வருகிற 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது.