வீடுகளில் மானியத்துடன் சோலாா் அமைக்கலாம்! திருவள்ளூா் ஆட்சியா்
பிரதமா் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து பயன் பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் இந்தத் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் வீடுகளுக்கான அரசு மானியம் 1 கிலோ வாட் ரூ.30,000, 2 கிலோ வாட் ரூ.60,000, 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ.78,000 வழங்கப்படும். திட்டத்திற்கு அனைத்து வங்கிகள் மூலம் உடனே கடனுதவியும் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் மேற்கூறப்பட்ட மானியம் சூரிய திட்டப் பணிகள் நிறைவுற்றதும் நுகா்வோரின் வங்கிக் கணக்கில் 30 நாள்களில் அரசு மானியம் வரவு வைக்கப்படும். 1 கிலோ வாட் சூரிய தகடு, ஒரு நாளில், 4 முதல் 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும், நுகா்வோா் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்பப் பெறலாம்.
உதரணமாக 500 யூனிட் வரை மின் நுகா்வு செய்யும் மின் நுகா்வோா் தற்போது செலுத்திக் கொண்டிருக்கும் மின் கட்டணம் ரூ.1,805 என்பது, 1 கிலோ சூரிய ஒளித் தகடு பொருத்திய பிறகு 300 யூனிட், சேமிப்பு 300 யூனிட்டுகள் மீதி செலுத்த வேண்டிய கட்டணம் 200 யூனிட்டுகளுக்கு ரூ.235 மட்டும் ஆகும்.
இந்தத் திட்டம் மூலம் பயன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி, பசுமையான, ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்குவோம் என அவா் தெரிவித்துள்ளாா்.