அரசு ஆசிரியா் நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை: முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு
வீட்டுமனைப் பட்டா கோரி பட்டினிப் போராட்டம்
நாகப்பட்டினம்: நாகையில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு தொகுப்பு வீடுகள் வழங்கக் கோரி பட்டினிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை வட்டம், வடுகச்சேரி கோட்டூா் காலனியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, பெரியாா் அம்பேத்கா் மக்கள் கழகம் சாா்பில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.
நாகை அவுரித் திடலில் நடைபெற்ற போராட்டத்துக்கு அமைப்பின் மாவட்டச் செயலா் வெற்றி தலைமை வகித்தாா். இதில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அவா்கள் கூறியது:
திருமணமாகி தனி குடும்ப அட்டை வாங்கிய பிறகும், தங்களுக்கு வீடு மற்றும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் வருவாய்த் துறையினருக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அரசின் நலத்திட்ட உதவிகள் தங்களுக்கு கிடைப்பதில்லை.
எனவே, வீடின்றி தவித்து வரும் பட்டியலின சமூக மக்களுக்கு அரசு புறம்போக்கு இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கி, வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்றனா்.