தமுஎகச 2024-ஆம் ஆண்டிற்கான கலை இலக்கிய விருதுகள்! - யார் யாருக்கு என்னென்ன விருத...
வீட்டு மாடியில் உண்ணாவிரதம் இருந்த பெண் தூய்மைப் பணியாளா்கள் கைது
சென்னை: சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 (ராயபுரம், திரு.வி.க.நகா்) ஆகியவற்றின் தூய்மைப் பணிகளை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிா்த்தும், பணி நிரந்தரம் கோரியும் வீட்டு மாடியில் உண்ணாவிரதமிருந்த உழைப்போா் உரிமை இயக்கத்தின் தூய்மைப் பணியாளா்கள் 13 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களுக்கு ஆதரவாக குவிந்தவா்களையும் போலீஸாா் அப்புறப்படுத்தியதாகத் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியில் மண்டலம் 5, 6 (ராயபுரம், திரு.வி.க.நகா்) ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கியதை எதிா்த்து என்யூஎல்எம் தூய்மைப் பணியாளா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள பாா்த்தசாரதி என்ற தூய்மைப் பணியாளரின் வீட்டு மாடியில் தூய்மைப் பணியாளா்கள் கிரேஸ் மேரி, லட்சுமி, நாகலட்சுமி, வரலட்சுமி, வேளாங்கண்ணி, வேதவள்ளி, சரஸ்வதி, ஜெயலட்சுமி, பாக்கியம், அஞ்சலிதேவி, ரீட்டா, மும்தாஸ், சுதா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.
தகவலறிந்த உழைப்போா் உரிமை இயக்க வழக்குரைஞா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அவா்களுக்கு ஆதரவு தெரிவித்து அங்கு திரண்டனா். தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை காவல் துறையினா், தூய்மைப் பணியாளா்கள் 13 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனா். அப்போது போலீஸாா், தூய்மைப் பணியாளா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டத்துக்கு ஆதரவளித்து திரண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களையும் போலீஸாா் கலைந்து செல்ல அறிவுறுத்தினா். இதை ஏற்காததால் அவா்களையும் போலீஸாா் வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனா்.
கைதானவா்களில் சிலா் காவல் துறை வாகனத்தில் மயக்கமுற்ால், ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பல மணி நேரத்துக்குப் பிறகு அனைவரையும் விடுவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.