"வெங்காயத்திற்கு நல்ல விலை அல்லது திருமணம் செய்ய எனக்குப் பெண்" - மகா. முதல்வரிடம் விவசாயி கோரிக்கை
நாட்டில் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா விளங்குகிறது. தொழில்துறை மட்டுமல்லாது விவசாயத்திலும் மகாராஷ்டிரா சிறந்து விளங்குகிறது. காய்கறிகள், பழங்கள் மகாராஷ்டிராவில் அதிக அளவில் விளைகின்றன. ஆனால் பருத்தி, சோயாபீன்ஸ், பருப்பு, வெங்காயம் போன்ற வகைகளுக்குப் போதிய விலை கிடைக்கவில்லை என்று கூறி, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பால் விலைகூட சரிந்துவிட்டது. பால் விவசாயிகளுக்கு மாநில அரசு இரண்டு ரூபாய் மானியம் கொடுத்து வருகிறது. பால் உற்பத்தி அதிகரிக்கும் போது தனியார் பால் பண்ணைகள் பால் விலையைக் குறைத்துவிடுகின்றன. விவசாய விலை பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றவில்லை.
விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காதது மற்றும் சரியான விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இளம் விவசாயிகளுக்குத் திருமணம் செய்து கொள்ள பெண்ணும் கிடைப்பதில்லை. இதை வலியுறுத்தி விவசாயி ஒருவர் நூதனமான முறையில் விவசாயம் செய்து வருகிறார்.
பண்டாரா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஜெய்பால் பண்டர்கர் பதாகையை ஏந்தியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தான் தூக்கிப்பிடித்துள்ள பதாகையில், "விவசாய விளைபொருட்களுக்குச் சரியான விலை கொடுங்கள். அல்லது விவசாயிகளின் மகன்களின் திருமணத்திற்கு முதல்வர் பெண் பார்த்துக்கொடுக்கவேண்டும்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இளம் விவசாயியின் இப்போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இப்போராட்டத்தை நடத்தி வரும் விவசாயி பண்டர்கர் கூறுகையில், "தீபாவளியும் வந்து சென்றுவிட்டது. திருமண சீசன் வந்துள்ளது. விவசாய விளைபொருட்களுக்குச் சரியான விலை கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். அப்படி முடியாவிட்டால் முதல்வர் விவசாயி மகன்கள் திருமணம் செய்ய பெண் பார்த்துக் கொடுக்கவேண்டும். விவசாய விளைபொருட்களுக்குச் சரியான விலை கிடைக்காததால், அது போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயி மகன்களுக்குப் பெண் கொடுக்கவே பெண்ணின் தந்தை ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிக்கிறார்" என்று தெரிவித்தார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...