செய்திகள் :

`வெறுப்பை உமிழ்வதற்கல்ல சினிமா' - மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறை சீண்டும் கேரள சினிமாக்காரர்கள்

post image

தற்போது, திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவான ‘எம்புரான்’ படத்துக்கு, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்று காவிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 'கோத்ரா கலவரப் பின்னணியைக் காட்டியுள்ளனர்' என்று பொங்கிக் கொண்டுள்ளனர். ஆனால், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமான முல்லைப்பெரியாறு அணை பற்றி, அந்தப் படத்தில் வேண்டுமென்றே விஷமப் பிரச்சாரம் செய்யப்பட்டிருப்பது பற்றி... காவிகளோ, கம்யூனிஸ்டுகளோ, கழகங்களோ, கதர்களோ, ஒருவரும் ஒருவார்த்தைகூட பேசவே இல்லை.

தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் 'திராவிட மாடல்' மூச்சுகூட விடவில்லை. இதனால், நொந்துபோய் கிடக்கின்றனர், லட்சோப லட்சமாக இருக்கும் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள்.

முல்லைப் பெரியாறு

மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி மேற்கு நோக்கிப் பாயும் முல்லைப்பெரியாறு நீரை மலைகளுக்கு இடையில் தடுத்து அணைகட்டி, அங்கிருந்து சுரங்கப்பாதை வழியாக தமிழகத்துக்குத் தண்ணீர் கொண்டுவருவதற்காகக் கட்டப்பட்ட அணைதான்... முல்லைப் பெரியாறு.

1895-ம் ஆண்டில் அக்டோபர் 10-ம் தேதி கட்டிமுடிக்கப்பட்ட இந்த அணையை நம்பியே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரமாகவும்... ஒரு கோடி மக்களின் நீராதாரமாகவும் இந்த அணை உள்ளது.

முல்லை பெரியாறு அணை

உச்ச நீதிமன்றத்தின் உறுதியான தீர்ப்பு!

கேரளாவில் 1976-ல் இடுக்கி அணை கட்டப்பட்டப் பிறகு, முல்லைப்பெரியாறு அணையை எப்படியாவது உடைத்தே ஆகவேண்டும் என்று கேரளக்காரர்கள் ஆரம்பித்து வைத்த உள்ளடி வேலைகள், இன்றுவரையிலும் பற்பல ரூபங்களில் தொடர்கின்றன. அணை பலவீனமாக உள்ளதாகக் கூறி 152 அடி நீர் தேக்கக்கூடிய அணையின் நீர்மட்ட உயரத்தை, 136 அடியாகக் குறைக்க வைத்தனர்.

கேரள தரப்பில் தொடர்ந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இறுதியில், உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், கட்டடத்துறை நிபுணர் குழு, வெளிநாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் குழுவினரைக் கொண்டு பலமுறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அனைவருமே, அணை பலமாக இருக்கிறது என்றே சான்றளித்தனர்.

இதைத் தொடர்ந்து, வரலாற்று சிறப்புமிக்கதொரு உத்தரவை 2014-ம் ஆண்டில் வெளியிட்டது உச்ச நீதிமன்றம். ‘அணை பலமாக உள்ளதால் 142 அடி வரை நீர்மட்டத்தை நிலைநிறுத்திக் கொள்ளலாம். கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டும் எனக் கூறுவதை ஏற்க முடியாது. முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளது எனக் கூறி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது. பேபி அணையை பலப்படுத்திய பிறகு, அணையின் நீர்மட்டத்தை பழையபடி 152 அடியாக நிலைநிறுத்திக் கொள்ளலாம்‘ என உத்தரவிட்டது. ஆனால், பேபி அணையை பலப்படுத்துவதற்கு தற்போது வரைக்கும் கேரள அரசு தடை போட்டுக்கொண்டே இருக்கிறது.

சினிமாக்காரர்களின் ஆத்திரத்துக்குக் காரணம்...

இந்நிலையில்தான், 'முல்லைப்பெரியாறு அணை உடையப் போகிறது. பெருவெள்ளம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கப் போகிறார்கள். நிலநடுக்கம் உருவாகி அணை உடையப் போகிறது' என்றெல்லாம் தொடர்ந்து பீதியைக் கிளப்பி வருகின்றனர். இத்தகைய பொய் பிரசாரங்களை முன்னெடுப்பதில் கேரள சினிமாக்காரர்கள் முன்னணியில் உள்ளனர். அதற்கு முக்கிய காரணமே... அணையைச் சுற்றிலும் இயற்கைச் சூழலை ஆக்கிரமித்திருப்பவர்கள்தான்.

முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் தமிழக பொதுப்பணித்துறை கட்டுபாட்டுக்குட்பட்டு 8 ஆயிரம் ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதிகள் உள்ளன. கடந்த 1979-ல் அணையை மையமாக வைத்து பிரச்னைக் கிளப்பி விடப்பட்டதிலிருந்தே... அதாவது 30, 35 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டன.

2014 உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 2 மாதங்கள் வரை அணையில் நீர்மட்டம் 142 அடி வரை நிலைநிறுத்தப்பட்ட போதுதான், இது தெரியவந்தது. கேரள அரசியல் பிரமுகர்கள், பெரியபெரிய தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அதை ஆக்கிரமித்துவிட்டனர். அதில் விவசாயப் பண்ணைகளையும், பங்களாக்களையும் உருவாக்கிவிட்டனர். இதையெல்லாம் காப்பாற்றிக் கொள்வதற்காகவே அணை குறித்து தவறான தகவல்களை தொடர்ச்சியாகப் பரப்பி வருகின்றனர். குறிப்பாக, சினிமாக்காரர்கள்.

தடைவிதித்த ஜெயலலிதா!

கடந்த 2011-ம் ஆண்டு கேரள இயக்குநர் சோகன் ராய், ‘டேம் 999’ என்ற சினிமாவை எடுத்தார். முல்லைப்பெரியாறு அணை உடைந்து, லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பது போல சித்திரிக்கப்பட்ட அந்தப் படத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு உடனடியாகத் தடைவிதித்தார்.

2020-ல் கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் ஜி.எஸ்.பிரதீப், முல்லைப்பெரியாறு அணை ஒரு முன் கருதுதல் என்ற 3 டி அனிமேஷன் படத்தை வெளியிட்டார். அதுவும் முல்லைப்பெரியாறு அணையை இடிக்கவேண்டும் என்பதைப் பற்றியே பேசியது.

ஜெயலலிதா

2021-ல் முன்னணி மலையாள நடிகரான பிருத்விராஜ், '125 ஆண்டுகள் பழமையான முல்லைப்பெரியாறு அணை செயல்படுவதை அனுமதிக்க முடியாது' என ட்விட்டரில் பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்களும், பிற மலையாள நடிகர்களின் ரசிகர்களும் 'முல்லைப்பெரியாறு டேம்' என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்டிங் செய்தனர். அதே பிருத்விராஜின் 'எம்புரான்'தான் இப்போது முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் வெளிப்படையாகவே விஷமத்தைக் கக்கியிருக்கிறது.

பொதுவாக மலையாள சினிமாக்களில் கட்சியின் பெயர்கள், கொடிகள், சின்னங்கள் என எல்லாவற்றையும் நிஜத்தில் இருப்பதை அப்படியே பயன்படுத்துவார்கள். கற்பனையாக உருவாக்க மாட்டார்கள். ஆனால், முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் மட்டும்... நெடும்பள்ளி அணை என்று கற்பனையாக ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஆனால், அதை வைத்துப் பேசப்படும் வசனங்கள் அனைத்துமே முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராகத்தான்.

உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வசூல் செய்வதுதான் நோக்கம்!

'பிருத்விராஜ் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார்' என்று கொந்தளிக்க ஆரம்பித்துள்ள பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கம் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளது.

இதுகுறித்து பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம் நம்மிடம் பேசியபோது, ‘’ கேரள சினிமா நடிகர்கள்தான் பெருமளவில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள்தான் சொகுசு பங்களாக்கள், தங்கும்விடுதிகள், கேளிக்கை விடுதிகளை கட்டியுள்ளனர். அதனால்தான் மலையாள சினிமா பிரபலங்கள் அணைக்கு எதிராக தவறான கருத்துகளையே பேசி வருகின்றனர்.

எம்புரான்

'எம்புரான்' படத்துக்கும் அது பேசும் அரசியலுக்கும் துளிகூட தொடர்பே இல்லாமல், முல்லைப் பெரியாறு அணையை சேர்த்துவிட்டுள்ளனர். இதன்மூலம், மலையாளிகளின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வசூல் செய்வதுதான் அவர்களுடைய நோக்கம். படத்தில் கதாநாயகி மஞ்சு வாரியார், முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி பேசும் வசனங்கள் கண்டிக்கத் தக்கது.

நெடும்பள்ளி எனும் முல்லைப் பெரியாறு!

'நானும் நீங்களும் பொறக்கறதுக்கு எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாடி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தோட கட்டுப்பாட்டுல இருந்த ராஜாக்கள்ல ஒருத்தர் (திருவிதாங்கூர் மகாராஜா), சாம்ராஜ்ய பக்திங்கற பேர்ல, கையெழுத்துப் போட்ட ஒப்பந்த அடிப்படையில, 999 வருஷங்களுக்கு நிம்மதியா வாழ, தண்ணீர் சேகரிக்கறதுக்காக கட்டப்பட்ட டேம்தான் நெடும்பள்ளி டேம் (முல்லைப்பெரியாறு).

இந்த டேமால வரப்போற ஆபத்துகள தடுக்கறதுக்கான தீர்வு, புது செக் டேம்ங்கற பேர்ல அவசர அவசரமா சுவர் எழுப்பறதால கிடைக்காதுனு உங்களுக்கும் தெரியும்... எனக்கும் தெரியும்?' என்று பீதியைக் கிளப்புகிறார் மஞ்சு வாரியர்.

'இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்களை பலிவாங்குற நெடும்பள்ளி அணை (முல்லைப்பெரியாறு). குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும்.'

'எப்பப் பார்த்தாலும் மழை, காத்துனு இருக்கிற ஊர். இது பத்தாதனு அந்த டேம் வேற பயமுறுத்திக்கிட்டே இருக்கு...' படத்தில் ஆங்காங்கே வரும் பல கேரக்டர்களும் முல்லைப்பெரியாறு அணையை மையமாக வைத்து, இப்படி உணர்ச்சிகரமான வசனங்களைப் பேசி உசுப்பேற்றுகின்றன.

இது, உச்ச நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயல்!

இதெல்லாம் இரண்டு மாநில உறவைக் கெடுப்பதற்கு மட்டுமே உதவும் என்பதை பிருத்திவிராஜ் போன்ற சினிமாக்காரர்களுக்குத் தெரியாதா? அதுமட்டுமல்ல, இப்படி பீதியைக் கிளப்பக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக, நீதிமன்ற அவமதிப்பும்கூட. இருந்தும் இப்படி செய்வதற்குக் காரணம்... தங்களுடைய சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டு படத்தை பார்க்க வைத்து ரசிகர்களிடம் இருந்து பணம் பண்ணுவதற்காகவும்தான்'' என்று சீறியவர்,

''படத்தில் குஜராத் கலவரத்தைத் தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து, 17 காட்சிகள் வெட்டியிருக்கும் படத்தின் நாயகன் மோகன் லால், 'நான் ஒரு சினிமாக்காரன். என்னுடைய படங்களில் தேவையில்லாமல் எந்த அரசியலையும் செய்யமாட்டேன்' என்று உருகி உருகி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேசமயம், பக்கத்திலிருக்கும் பங்காளிகளான நம் மீது மட்டும் அவருக்கு அக்கறை இல்லை என்பதுதான் வேதனை.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகளை நீக்கவேண்டும். இல்லையென்றால், கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம்.

தயாரிப்பாளர்களை சும்மா விடமாட்டோம்!

தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் தமிழகத்தில் 447 கிளைகள் வைத்திருக்கும் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனர் கோபாலன் இணைந்து எம்புரான் படத்தைத் தயாரித்துள்ளனர். இவர்களின் பெரிய வருமானத்துக்குக் காரணமாக தமிழர்கள் இருக்கிறார்கள், ஆனால், எந்த உறுத்தலும் இன்றி தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு பாசனப் பரப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளனர்.

இவர்களைக் கண்டிக்கும் வகையில், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட்ஸ் முன்பாக ஏப்ரல் 2 ம் தேதி போராட்டத்தைத் தொடங்க உள்ளோம். விவசாயிகளுக்காக விவசாயிகள் மட்டும்தான் போராடுகிறோம். ஆனால், கேரளாவில் அனைத்து அரசியல் கட்சியினர், சினிமாக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராடுவார்கள். அதேபோல தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் என அத்தனை பேரும் தமிழ்நாட்டின் விவசாயிகளான எங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும்“ என்று வேண்டுகோள் வைத்தார்.

சினிமாக்கள் பொறுப்பை உணர்ந்து எடுக்கப்பட வேண்டும்... வெறுப்பை உமிழ்வதற்காக அல்ல. எப்போதுதான் உணர்வார்களோ இதுபோன்ற 'படைப்பாளி'கள்!

மணிப்பூர்: 'பிரச்னையை விவாதிக்க நடுராத்திரி 2 மணியா?' - மக்களவையில் கனிமொழி அடுக்கிய கேள்விகள்

2023-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை, மணிப்பூரில் கலவரங்கள் பற்றி எரிந்து வருகிறது. ஆனால், இன்னமும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆளும் பாஜக அரசு என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது... அத்தனை கலவரங்களும... மேலும் பார்க்க

'திருக்குறளும், இந்தி பாடலும்' நிர்மலா சீதாராமன் Vs திருச்சி சிவா - மாநிலங்களவையில் சுவாரஸ்ய விவாதம்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை எதிர்ப்பு குறித்த கடுமையான விவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் திமுக எம்... மேலும் பார்க்க

தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய பாலிடிக்ஸ்

கடந்த 2021-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். முன்னதாக, அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க-வுக்கு நான்கு இடங்கள் கிடை... மேலும் பார்க்க

`கூட்டாட்சி தத்துவத்தின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் தாக்குதல்...' - பிரகாஷ் காரத்

``தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் 2026 க்கு பிறகு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரும் சமநிலையின்மை ஏற்படும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கா... மேலும் பார்க்க

`மாநில அரசு, மத்திய அரசின் விளம்பர தூதர்கள்போல செயல்பட இயலாது' - மதுரையில் பினராயி விஜயன் பேச்சு

"கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.." என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்மதுரையில... மேலும் பார்க்க