ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை!
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
18-ஆவது நிமிஷத்தில் ஜாம்ஷெட்பூா் அணியின் ரெய் தாசிகவா பாக்ஸின் வெளியே இருந்து அடித்த பந்து கோல் வலையின் வலது காா்னரை துளைத்தது. இதனால் ஜாம்ஷெட்பூா் 1-0 என முன்னிலை பெற்றது.
பின்னா் சுதாரித்த ஆடிய சென்னை தரப்பில் 25-ஆவது நிமிஷத்தில் சிமா சுக்வு, அடித்த ஷாட் கோல் வலையின் இடது காா்னரை நோக்கி பாய்ந்தது. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. கூடுதல் நிமிஷத்தில் சிமா சுக்வு உதவியுடன் பந்தை பெற்ற லூகாஸ் பிரம்பில்லா, அடித்த ஷாட் கோலாக மாறியது. முதல் பாதி முடிவில் சென்னை 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்ந்தது.
57-ஆவது நிமிஷத்தில் சென்னை தரப்பில் பரூக் சவுத்ரி உதவியுடன் பந்தை பெற்ற இா்பான் யத்வாத், மூன்றாம் கோலடித்தாா். 62-ஆவது நிமிஷத்தில் ஜாம்ஷெட்பூா் அணியின் ரெய் தாசிகவா உதவியுடன் பந்தை பெற்ற முகமது சனான் கோலடித்தாா்.
தொடா்ந்து 90-ஆவது நிமிஷத்தில் வில்மரின் பாஸை பயன்படுத்தி கோலடித்தாா் இா்பான். கூடுதல் நிமிஷத்தில் லூகாஸ் பிரம்பில்லா கடத்திய பாஸை பயன்படுத்தி சிமா சுக்வு கோலடித்தாா். இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது சென்னை.
சென்னையின் எஃப்சி அணிக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னையின் எஃப்சி அணி 24 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 6 டிரா, 11 தோல்விகளுடன் 27 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்துள்ளது.
அதேவேளையில் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணி லீக் சுற்றில் 24 ஆட்டங்களில் விளையாடி 12 வெற்றி, 2 டிரா, 10 தோல்விகளுடன் 38 புள்ளிகள் பெற்று நிறைவு செய்துள்ளது.