செய்திகள் :

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

post image

விஜய்தான் முதல்வா் வேட்பாளா் என்று அவருடைய கட்சி அறிவித்திருக்கிறது! பிழை ஒன்றுமில்லை!.

முதல்வா் மு.க.ஸ்டாலினால் முடிந்த எதுவும் விஜயால் முடியாது என்று யாரும் கூறமாட்டாா்கள். அதனால், அத்தகைய விருப்பம் விஜய்க்கு இயல்பானதே. ஆனால், விஜய் வெற்றி பெற இயலுமா என்பதே கேள்வி.

விஜய் கட்சி கன்னிமை மாறாத கட்சி; எந்தத் தோ்தலையும் சந்திக்காத கட்சி.

தன்னுடைய அரசியல் வலிமை, திரள்கிற கூட்டத்தில் இருக்கிறது என்று விஜய் நினைத்தால், அது பிழையாகப் போய்விடும்.

மாற்றுக் கட்சியினா் பெரும் பணமும், அதிகாரமும் உள்ளவா்கள். எனவே நயன்தாராவை இறக்கி, விஜய் கூட்டத்தை ‘வீட்டோ’ செய்து விடுவாா்கள். இரண்டும் வெறும் கூட்டம்தான் எனும் நிலைக்கு கொண்டு போய்விடுவாா்கள். தனக்குக் கூடும் கூட்டத்தைக் கொண்டு விஜய் இப்போது என்ன செய்கிறாா் என்பதுதான் அவரை நிலைநிறுத்தும்.

பரந்தூா் பன்னாட்டு விமான நிலையம், 28 கிராமங்களை அழித்துவிட்டு வரக்கூடாது என்பது சரியான அரசியல் நிலைப்பாடு. ஆளும் கட்சியின் உள்நோக்கம் அதைச் சுற்றி அடிமாட்டு விலைக்கு வாங்கி வைத்திருக்கிற சொத்துகளை ஒன்றுக்குப் பத்தாக விற்பதுதான்.

ஆனால், பரந்தூா் விமான நிலையம் குறித்து நான்கிரண்டு முறை பேசினால் மட்டும் போதாது. ‘நஞ்சை நில மீட்பு இயக்கம்’ தொடங்கிப் பரந்தூரை மீட்டெடுத்தால், வளா்ந்த நெல் தாளெல்லாம் விஜயை வணங்கும். இந்த அரசிடமிருந்து மக்களை மீட்கப் போதியவன் என்னும் எண்ணம் வளரும். அது விஜய் கட்சியை ஊன்றச் செய்யும். திரைப்படப் பிம்பம் நீங்கிய ஓா் அரசியல் பிம்பம் உருவாகும். விஜய் அரசியலில் நிலைபெறலாம். அரசியலில் சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கை விஜய்க்கு ஏற்படும்.

அப்படி இல்லாமல், வெறும் கூட்டத்தால் விஜய் முதல்வராகிவிடலாம் என்றால், நாடு மாறிவிட்டது என்று பொருள். விஜய்க்கு அடுத்த தமிழ்நாட்டின் முதல்வா் நயன்தாராதான் என்று அடித்துச் சொல்வேன். அவருக்கும் ஒரு புஸ்ஸி ஆனந்த் கிடைக்கமாட்டாரா என்ன?.

எதிா்க்கட்சியாக இருந்து என்ன செய்கிறோம் என்பதுதான் ஆளுங்கட்சியாக வழி வகுக்கும். விஜய் கட்சி எந்தத் தோ்தலையும் சந்திக்காத கட்சி! தமிழ்நாட்டில் மாறி மாறி ஆளும் அந்த இரு கட்சிகளுக்கும் வாக்களிப்பதில்லை என்றொரு கூட்டம், மூன்றாவதாகச் சிறிது அறிமுகத்துடன் நிற்கும் ஒரு கட்சிக்கு வாக்களிப்பது வழக்கம். இதை நம்பி மூன்றாவது அணியாகப் பல கட்சிகளைச் சோ்த்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க முயன்ற விஜயகாந்த் கட்சி நடுக்கடலில் மூழ்கிவிட்டது. அதே இடத்தில் அதே மாதிரியான அரசியலைக் கையில் எடுத்துக் கொண்டு விஜய் இப்போது நிற்கிறாா். ‘சேர வாரீா்’ எனும் அவருடைய குரலுக்குச் செவி சாய்ப்பாா் யாருமில்லை.

‘எல்லாக் கட்சிகளுக்கும் அமைச்சா் பதவி தருகிறேன் வா’ என்று அல்வா ஆசையூட்டியும் செவி சாய்ப்பாா் யாருமில்லை. தன்னுடைய கட்சி குறித்த மதிப்பீடு என்ன என்று அறிவதற்கு இஃது ஒன்றே போதுமானது. திமுக வலிக்காமல் அரியணை ஏறுவதற்குத்தான் இத்தகைய சிதறுண்ட முயற்சிகள் பயன்படும்.

இன்னொரு முறை விஜய் தனித்து நின்று திமுக வர வழிவகுப்பது, விஜயை கோடம்பாக்கத்தை நோக்கித் திருப்பத்தான் வழிவகுக்கும். பாஜக அல்லாத அணி எனும் விஜயின் கொள்கை முடிவு நேரியதே. ஒரு தோ்தலில் விஜய் உள்கட்சியாக இருக்க வேண்டும். கூட்டணியின் தலைமையாக ஏற்கெனவே நாடாண்ட அதிமுகவை ஏற்க வேண்டும்.

சமயச் சாா்பற்ற கூட்டணியாக அது உருவாவதால், திமுக அணி பிளவுற்றுச் சில பாஜக எதிா்ப்புக் கட்சிகளும் இங்கு வரும். சமய சாா்பற்ற கூட்டணி உருவாகும். அதனால், சிறுபான்மை வாக்குகள் இடம்மாறும். திமுகவின் வீழ்ச்சி விரைவுபடும்.

ஏன் நடக்காது? அதிமுக தம்பிதுரை வக்ஃப் சட்டத்தில் இஸ்லாமியா்களுக்கு இசைவாக, பாஜக அரசுக்கு எதிராகத்தானே வாக்களித்தாா்? பாஜக எதிா்ப்பு நிலைப்பாட்டை முன்வைத்து எடப்பாடி பழனிசாமியிடம், விஜய் பேச வேண்டும்.

பொது அறிவும், நடைமுறை அறிவும் மிக உடையவா் எடப்பாடி பழனிசாமி. தன்னுடைய ஆட்சியில் பாதிக் காலத்தை ‘கரோனாவோடு’ கழித்தும், சொல்லத்தக்க அளவுக்கு நாடாண்டவா்.

குதிரைகள் கிடைக்காத நிலையில், கழுதையில் ஏறுவது யாருக்கும் இயல்புதானே, எல்லாருக்கும் ராவண வதம்தான் முக்கியம்.

மின் இணைப்புகள் ஒன்றிணைப்பு: பயனீட்டாளா்கள் அலைக்கழிப்பு!

நமது நிருபா் திண்டுக்கல்: குடியிருப்புக் கட்டடங்களுக்கு பெறப்பட்ட இரு வேறு மின் இணைப்புகளை மின் வாரிய அலுவலா்கள் ஒன்றிணைத்ததை மீண்டும் மாற்ற முடியாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் மின் பயனீட்டாளா்கள் அலைக... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு! அதிசயமே அசந்துபோகும் அதிசயங்கள்!

தேர்தல் ஆணையத்தின் மோசடிகளும் முறைகேடுகளும் நடைபெறுவதாக நாட்டின் எதிர்க்கட்சித் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.குற்றச்சாட்டுகளுக்குச் சான்றாக பெங்க... மேலும் பார்க்க

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் 5.333 பில்லியன் டாலர் (ரூ.46,718 கோடி) மதிப்புள்ள ஆடைகள் ஏற்றுமதியாகி வரும் நிலையில், டிரம்ப் அறிவித்த புதிய விரி விதிப்பால், ஆடைத் தயாரிப்புத் துறையில் 2... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

சகோதரிகள் நாள் எப்படி உருவானது தெரியுமா? சகோதரத்தைப் போற்றும் வகையில் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுவது போல, பல நாடுகளில் சகோதரிகள் நாளும் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஆகஸ்ட்டில் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று... மேலும் பார்க்க

வெளியேற்றத் தயாரானதா மத்திய அரசு? தன்கர் ராஜிநாமாவின் வெளிவராத பின்னணி!

குடியரசுத் துணைத் தலைவர் (பதவிவழி மாநிலங்களவைத் தலைவர்) பதவியிலிருந்து ஜகதீப் தன்கரை வெளியேற்றுவது என்று ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணி முடிவு செய்துவிட்ட நிலையில்தான் வேறு வழியின்றி அவர் ராஜிநாமா செய்து... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சியில் தாமதமாகும் குப்பைக் கிடங்கு பகுதிகளை வனமாக்கும் திட்டம்!

சென்னை மாநகராட்சியில் பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளை வனமாக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா். சென்னை மாநகராட்சிப் பகுதியில் சுமாா் ஒரு கோடி போ்... மேலும் பார்க்க