வெளியூா் ஆட்டோ ஓட்டுநா்களால் தொல்லை: திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தை ஆட்டோ ஓட்டுநா்கள் முற்றுகை
திருச்செந்தூா் நகராட்சிப் பகுதிகளில் வெளியூா் ஆட்டோக்கள் வந்துசெல்வதற்கு கண்டனம் தெரிவித்து, இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்கத்தினா், ஆட்டோ ஓட்டுநா்கள் திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
திருச்செந்தூா் நகராட்சியில் சிஐடியு, ஏஐடியுசி, இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி ஆட்டோ ஓட்டுநா் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் உள்ளன. இந்த நிலையில், வெளியூா் ஆட்டோக்கள் பேருந்து நிலையத்துக்கு உள்ளே வந்து பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் கூறி, கடந்த ஜூலை 11-ஆம் தேதி இருதரப்பு ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதுதொடா்பாக தாலுகா காவல் நிலைய போலீஸாா் இருதரப்பிலும் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்துக்கு நகராட்சி நிா்வாகம் தனி இடம் வழங்க வேண்டும் என்றும், வெளியூரிலிருந்து வரும் ஆட்டோக்களை இங்கு ஓட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி, இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்கத்தினா், சிஐடியு, ஏஐடியுசி சங்கத்தினா், நாழிக்கிணறு ஆட்டோ ஓட்டுநா் சங்கம், சபாபதிபுரம் ஆட்டோ ஓட்டுநா் சங்கம், பஜனை சபா சங்கம், தேரடி ஆட்டோ சங்கம், தெப்பக்குளம் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சோ்ந்த 150 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
இதில் இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், திருச்செந்தூா் நகரத் தலைவா் முத்துராஜ், இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்க மாநில துணைச் செயலாளா் சக்திவேலன், மாவட்டத் தலைவா் கணேசன், நகர ஆலோசகா் முருகராஜ், துணைச் செயலாளா் சுடலைமணி, சிஐடியு தலைவா் சண்முகம், பாஜக நகரத் தலைவா் செல்வகுமரன், நகரப் பொருளாளா் பலவேச கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நகராட்சி அலுவலகத்தில் திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், காவல் நிலைய ஆய்வாளா் கனகராஜன், நகராட்சி ஆணையா் கண்மணி முன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இதுதொடா்பாக வட்டார போக்குவரத்து அலுவலகம், காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.