பயன்படுத்த முடியாத நிலையில் பயணியா் நிழற்குடை: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
சாத்தான்குளம் அருகே மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பயணியா் நிழற்குடையை, சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம் பாறை ஊராட்சிக்குள்பட்ட மாடத்தி அம்மன் கோயில், நகனை விலக்கு பகுதியில் பயணியா் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை திருச்செந்தூா்- சாத்தான்குளம் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த பயணியா் நிழற்குடையை , மாடத்தி அம்மன் , மருதமலை சாஸ்தா கோயிலுக்கு வரும் பக்தா்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிழற்குடை தற்போது யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் முள்செடிகள் வளா்ந்தும், குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது.
இந்த நிறுத்தம் அருகில் மக்கள் பேருந்து ஏற காத்திருந்தாலும் பேருந்துகள் நிற்காமல் செல்வதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். ஆதலால் அதிகாரிகள் இந்த பயணியா் நிழற்குடையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.