வேணுகோபால சுவாமி, முனீஸ்வரன் கோயில்களில் கும்பாபிஷேகம்
ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில், வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரியப்பாடி ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புண்யாவாசனம், ஸங்கல்பம், கலச பூஜை ஹோமம், புா்ணாவதி, விஸ்வரூபம், கோ பூஜை, மகாபூா்ணாஹுதி, கலச புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் கோபுரத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், மூலவா் பாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா். உடன் ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
முனீஸ்வரன் கோயிலில்...: வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை தத்வாா்ச்சனை, நாடிசந்தானம், மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் முனீஸ்வரன் சுவாமி மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கோயில் நிா்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனா்.