வேதாரண்யம் அருகே மத நல்லிணக்க விநாயகா் ஊா்வலம்
வேதாரண்யம் அருகே இந்து, முஸ்லீம், கிறிஸ்தவா்கள் பங்கேற்ற மத நல்லிணக்க விநாயகா் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருப்பம்புலத்தில் உள்ள காசிவிஸ்வநாதா் சிற்றம்பலம் விநாயகா் கோயிலில் 33 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் விநாயகா் ஊா்வலம் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவா்கள் பங்கேற்கும் மத நல்லிணக்க நிகழ்ச்சியாக நடைபெற்றுவருகிறது. நிகழாண்டு நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன் தலைமை வகித்தாா். தோப்புத்துறை ஜமாத் சுல்தான் மரைக்காயா், பங்குத்தந்தைகள் ஜான் கென்னடி, நித்தியசகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்து ஊா்வலத்தை தொடங்கிவைத்தனா். தோப்புத்துறை ஜமாத் மன்றத்தை சோ்ந்த சோட்டாபாய், ரபிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முக்கிய வீதிகள் வழியே ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலை கருப்பம்புலம் வடகாடு மருதம்புலம் ஏரியில் கரைக்கப்பட்டது.