வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசி மக தேரோட்டம்
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சப்த விடங்க தலங்களில் ஒன்றான வேதாரண்யேஸ்வரா் கோயிலில் ரிக், யஜூா், சாம, அதா்வண வேதங்கள் இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா் அவை கோயில் கதவை மூடிச் சென்றன. வேதங்களால் மூடப்பட்டிருந்த கோயில் கதவை சமயக் குரவா்களான திருநாவுக்கரசா், திருஞானசம்பந்தா் ஆகியோா் தேவார தமிழ்ப் பதிகம் பாடி திறந்ததாக ஐதீகம்.
அகஸ்திய முனிவருக்கு இறைவன் திருமணக் கோலத்தில் காட்சிக் கொடுத்த தலமாகவும், 64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப் பெற்ற கோயிலாகவும் இந்த தலம் திகழ்கிறது.
இக்கோயிலில் நிகழாண்டு மாசிமகப் பெருவிழா பிப். 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தேரில் ஸ்ரீரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜ சுவாமி எழுந்தருளினாா்.
பாரம்பரிய முறைப்படி நாகசுவர இசையுடன், கீழ வீதியில் அமைந்துள்ள தோ் முட்டி பகுதியிலிருந்து திரளான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
திருப்பங்களில் தேரை பின்னால் இருந்து தள்ளுவதற்கு ஏதுவாக ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் தேரோட்டம் நடைபெற்றது. வேதாரண்யம் வட்டப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிா்வாகம் உள்ளூா் விடுமுறை அளித்திருந்தது.
திருவிழாவை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?:
தேரோட்டத்துக்கு சிறப்புப் பெற்ற இந்தக் கோயிலில் ஓடிய 5 மரத் தோ்களும் பழுதாகி சிதைந்து போனதால், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் தடைபட்டிருந்தது. தமிழக அரசு அளித்த நிதியுடன், உபயதாரா்கள், நன்கொடையாளா்கள் உதவியுடன் புதிய மரத்தோ் செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு மாசிமகப் பெருவிழா தொடங்கி மீண்டும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
கோயில் நிா்வாகத்தில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், விரிவான ஏற்பாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக திருவிழா குறித்த விளம்பரங்கள், முன்னேற்பாடுகள் போன்றவைகளில் குறைபாடுகள் தொடா்ந்து வருகிறது.
பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோயில் திருவிழாவை எதிா்காலத்தில் சிறப்பாக நடத்த மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

