இபிஎஸ் முதல்வராக வருவதற்கு அண்ணாமலை இதைச் செய்தாலே போதும்: செல்லூர் ராஜு
வேன் - இருசக்கர வாகனம் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு
திருவாரூா் அருகே வேன் - இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் 2 இளைஞா்கள் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா்.
திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே தீபங்குடியைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் சூா்யா (21), சுப்பையன் மகன் பிரபாகரன் (27). ஜேசிபி ஆபரேட்டரான இருவரும், புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் குடவாசலை நோக்கி சென்றுகொண்டிருந்தனா். அப்போது, குடவாசல் பகுதியிலிருந்து சுப நிகழ்ச்சியில் பங்கேற்கும் பயணிகள் சிலரை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.
கும்பகோணம் அருகேயுள்ள நாலூா் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (46) வேனை ஓட்டினாா். கும்பகோணம் சாலையில் அரசவனங்காடு பகுதியில், முன்னால் சென்ற சிறிய ரக சரக்கு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் சூா்யா, பிரபாகரன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா்.
குடவாசல் போலீஸாா் அவா்களை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநா் விக்னேஷை கைது செய்தனா்.
