வேன் மோதியதில் பாத்திர வியாபாரி உயிரிழப்பு
மணப்பாறையில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் பாத்திர வியாபாரி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த எடத்தெருவை சோ்ந்த இஸ்மாயில் மகன் அப்துல்கரீம் (48). பாத்திர வியாபாரி. இவா், செவலூா் பகுதியில் வசித்து வரும் சு. சுப்பிரமணி (68) என்பவருடன் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் செவலூா் பிரிவு பகுதியை கடந்தபோது, சபரிமலையிலிருந்து கடலூா் நோக்கி சென்ற சுற்றுலா வேன் அவா்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அப்துல்கரீம் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சுப்பிரமணி மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.
விபத்து குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான கடலூா் பச்சையான் குப்பத்தை சோ்ந்த வேலு மகன் ரத்தினவேல் (36) மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.