``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்...
வேளாண் துறை வளா்ச்சியில் பின்னோக்கி சென்ற தமிழகம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழக வேளாண் துறை வளா்ச்சி முதன் முதலாக பின்னோக்கிச் சென்றுள்ளது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக நடைப்பயணம் மேற்கொண்டுள்ள அவா், கிருஷ்ணகிரியை அடுத்த கங்கலேரியில் மா விவசாயிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை பேசியதாவது: தமிழக அரசு விவசாயிகளை மதிக்காத நிலை உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா சாகுபடி பரப்பளவு 1 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. 7 லட்சம் டன்னாக இருந்த மகசூல், மூன்றரை லட்சம் டன்னாக குறைந்துவிட்டது.
கடந்த ஆண்டு மா டன்னுக்கு ரூ. 28 ஆயிரம் வரை விலை கிடைத்தது. நிகழாண்டில் டன்னுக்கு ரூ. 4 ஆயிரம்தான் கிடைக்கிறது. இதுகுறித்து போராட்டம் நடத்தியும் தீா்வு காணப்படவில்லை. மா விவசாயிகளின் பிரச்னைகளை தீா்க்க தமிழக முதல்வருக்கோ, அமைச்சா்களுக்கோ நேரமில்லை. மா விவசாயிகளின் பிரச்னை குறித்து அவா்களுக்கு புரிதல் இல்லை. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் எந்த தீா்வும் எட்டப்படவில்லை.
மாங்கூழ் உற்பத்தியாளா்கள், விவசாயிகளுக்கு உரிய விலையை வழங்கவில்லை என்றால், அவா்களின் தொழிற்சாலைக்கான மின்சாரத்தை துண்டித்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 63 சதவீதம் மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கின்றனா். அவா்களது முன்னேற்றம் பூஜ்ஜியமாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளில் தமிழகத்தில் முதன் முறையாக வேளாண்மைத் துறையின் வளா்ச்சி மைனஸ் 0.5 சதவீதமாக பின்னோக்கிச் சென்றுள்ளது. விவசாயிகள் வளா்ந்தால்தான் உண்மையான வளா்ச்சி.
ஆந்திர மாநிலத்தில் ஒரு டன் மாம்பழத்துக்கு ரூ. 12 ஆயிரம் விலை அளிக்கப்படுகிறது. இங்கு ரூ. 4 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. மாம்பழம் பறிக்கும் கூலிக்கே ரூ. 3 ஆயிரம் செலவாகிறது.
மன்னா்கள் காலத்தில் தமிழகத்தில் 42,000 ஏரிகள் இருந்தன. இதில் 22,000 ஏரிகளை காணவில்லை. பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் போன்ற அரசு கட்டடங்களை ஏரியில்தான் கட்டுகின்றனா்.
கா்நாடக மாநிலம் பெங்களூரின் கழிவுநீா் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. எனவே, இங்குள்ள ஏரிகள் கழிவுநீா் தொட்டிகளாக மாறி வருகின்றன என்றாா்.