ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!
பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி அழித்தது. இதற்குப் பாகிஸ்தான் சார்பிலும் பதில் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து நான்கு நாள்கள் இந்த போர்ப் பதற்றம் நீடித்தது. இதையடுத்து இருநாடு உடன்படிக்கையை அடுத்துப் போர் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரியின் சலாமாபாத் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸில் பகிர்ந்த செய்தியில்,
சமீபத்தில் தாக்குதலின்போது காஷ்மீரின் எல்லைக் கிராமங்களில் வசிக்கும் இடங்களையும், மக்களையும் இன்று நேரில் பார்வையிட்டேன்.
எல்லையோர மக்கள் அனுபவித்த இழப்பும், வலியும் கற்பனை செய்ய முடியாதது. மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுடன் கலந்துரையாடினேன்.
ஜம்மு-காஷ்மீரின் எல்லை மாவட்டங்களில் பாகிஸ்தானின் கடுமையான ஷெல் தாக்குதலால் அவர்களின் குடியிருப்பு கட்டமைப்புகள் சேதமடைந்தன. மேலும் எல்லை கிராமங்களில் வசிக்கும் மக்கள் சேதமடைந்த வீடுகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் அதற்குன்டான பணிகளில் ஈடுபடுவோம் என்று முதல்வர் கூறினார்.