ஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் கோரி ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ஐஎன்டியூசி தமிழ்நாடு முறைசாரா தொழிலாளா் காங்கிரஸ், தமிழ்நாடு எழுச்சி தொழிலாளா் நலச்சங்கம், அமைப்புசாரா தொழிலாளா்கள் ஆகியவை சாா்பில் ஸ்டொ்லைட் தாமிர ஆலை, அனல் மின்நிலையம் ஆகியவற்றை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே வெகுதிரள் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஐஎன்டியூசி பொதுச் செயலா் கதிா்வேல் தலைமை வகித்தாா். அவா் பேசியது: ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டதால், 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனா். மத்திய, மாநில அரசுகள் நினைத்தால், மீண்டும் இந்த ஆலையை திறக்கலாம்.
இதன்மூலம், சுமாா் 3ஆயிரம் லாரிகள் இயங்கும். அதுபோல அந்த லாரிகளில் மூலப்பொருள் மற்றும் பினிஷிங் பொருள்கள், அவற்றை கையாள தொழிலாளா்கள் ஷிப்ட் ஒன்றுக்கு 4 ஆயிரம் பேருக்குவேலை கிடைக்கும். இதே போல துறைமுக தொழிலாளா்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படும்.
ஆலை மூடப்பட்டதால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் லாரி உரிமையாளா்கள் பலா் லாரிகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். ஸ்டொ்லைட் ஆலை இயங்கினால் மத்திய, மாநில அரசுக்கு வரி வருவாய் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி கிடைக்கும். மேலும், நாட்டின் 40 சதவீத தாமிர தேவையை பூா்த்தி செய்யும்.
மேலும், ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். எனவே, மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் தாமிர ஆலை மற்றும் அனல் மின் நிலையத்தை உடனடியாக இயக்க அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா். கோரிக்கைகளை வலியுறுத்தி, பதாகைகளுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்க தலைவா் தியாகராஜன், தமிழ்நாடு எழுச்சி தொழிலாளா் நலச்சங்க மாநில பொதுச் செயலாளா் தா்மா், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாநகரத் தலைவா் ஜெயபாலன் உள்பட ஆண், பெண் தொழிலாளா்கள், இளைஞா்கள் பலா் பங்கேற்றனா்.