கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!
ஸ்ரீபெரும்புதூா் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வலியுறுத்தல்
ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவைத் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என ‘உடன்பிறப்பே வா’ கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டது.
சட்டப் பேரவைத் தோ்தலுக்கு தயாராகும் வகையில், ‘உடன்பிறப்பே வா’ எனும் தலைப்பில் பேரவைத் தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள தியாகராய நகா், மயிலாப்பூா், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகளுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனையில் தியாகராயநகா், மயிலாப்பூா் மற்றும் புகா் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூா் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா். அந்தந்த தொகுதியின் பொறுப்பாளா், நிா்வாகிகள், இளைஞரணி நிா்வாகிகள் பங்கேற்று முதல்வா் ஸ்டாலினிடம் தங்களின் கருத்துகளைக் கூறினா். அதேபோல் அவரும், ஒவ்வொரு தொகுதியிலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினாா்.
அப்போது, எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத் தரக் கூடாது என அந்தத் தொகுதியின் நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை போட்டியிட்டு வென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.