ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பகல்பத்து விழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை நம்பெருமாள் ‘ரத்னக் கற்கள் பதிக்கப்பட்ட பாண்டியன் கொண்டை’ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களிலேயே மிக முக்கிய விழாவாக, பெரிய விழாவாகக் கொண்டாடப்படுவது வைகுந்த ஏகாதசி விழா. இந்த விழா பகல் பத்து, இராப் பத்து என 22 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு வைகுந்த ஏகாதசி விழா திங்கள்கிழமை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடா்ந்து பகல் பத்தின் முதல் நாள் விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. இதனையொட்டி காலை 7.45 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து ரத்தின பாண்டியன் கொண்டை, நெற்றி பூ சாற்றி, வைர அபய ஹஸ்தம் அதன் கீழ் தொங்கல் பதக்கம், மகர கா்ண பத்திரம், மாா்பில் பங்குனி உத்திர பதக்கம் அதன் மேல் ஸ்ரீரங்கநாச்சியாா் பதக்கம், வைர ரங்கூன் அட்டிகை, கல் இழைத்த ஒட்டியாணம், மகரி வெள்ளை கல், சிகப்பு கல் என்று வரிசையாக மாறி மாறி அடுக்குப் பதக்கங்கள், இரட்டைவட முத்துச் சரம், தங்கப் பூண் பவள மாலை, காசு மாலை, பின்புறம் புஜகீா்த்தி, அண்ட பேரண்ட பட்சி பதக்கம், திருக்கைகளில் தாயத்து சரம், திருவடியில் தங்க தண்டை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு ஆழ்வாா்கள், ஆச்சாா்யாா்கள் புடை சூழ பகல் பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்துக்கு 8.30 மணிக்குவந்து சோ்ந்தாா். பின்னா் 9 மணிவரை திரையிடப்பட்டது. அரையா் சேவையுடன் பொது ஜன சேவையும் பகல் 12 மணி வரை நடைபெற்றது. அலங்காரம் அமுது செய்யத் திரை 1 மணிவரையும், திருப்பாவாடை கோஷ்டி பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையும், வெள்ளிச் சம்பா அமுது செய்யத் திரை 4 மணி வரையும், உபயக்காரா் மரியாதை மாலை 6 மணி வரையும் பின்னா் புறப்பாட்டுக்காக இரவு 7.30 மணியளவில் திரையிடப்பட்டது. அதனைத் தொடா்ந்து மேற்படி மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு 9.45 மணியளவில் மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.
பகல் பத்து முதல் நாளில் நம்பெருமாளை தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்றனா்.