ஸ்ரீவில்லிபுத்தூர்: ``லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும்..'' - CPIM பேனரால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமம் நாகபாளையத்தில், குருசாமி என்பவரின் குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட 2.50 சென்ட் இடம் அப்பகுதியில் உள்ளது. அந்த நிலத்துக்கான பட்டா குருசாமியின் தந்தை சண்முகத்தேவர் மற்றும் சித்தப்பா தங்கவேல்தேவர் ஆகியோர் பெயரில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், இந்த இடத்தை கடந்த 2022-ம் ஆண்டு சந்திரசேகர் என்பவர் தனது தந்தை முத்துச்சாமி தேவர் மற்றும் பெரியப்பா காளிமுத்து தேவர் ஆகியோர் பெயரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறைகேடாக பட்டா பதிவு பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த மோசடியை அறிந்த குருசாமி, போலியாக பதிவுசெய்யப்பட்ட பட்டா மாறுதலை ரத்து செய்யக்கோரி, கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்து இடங்களிலும் மனு கொடுத்துள்ளார்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மல்லி கிராம நிர்வாக அலுவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ஆகியோருக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன பேனர்கள் வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் சசிக்குமார் நம்மிடம் பேசுகையில், "பேலியான பட்டா மாறுதலை ரத்துசெய்யக்கேட்டு மனு கொடுத்தவரை கடந்த இரண்டு வருடங்களாக அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணம் இருந்தால் மட்டுமே எந்த ஒரு வேலையும் நடைபெறுகிறது. இந்தப்போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்ற நிலை நீடிப்பது கேவலமானது. ஆகவே, மாவட்ட மனு மீது நியாயமாக நடவடிக்கை எடுக்கத்தவறிய அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
