கார் பார்க்கிங் தகராறு; செக்யூரிட்டி மீது துப்பாக்கிச் சூடு.. போதை ஆசாமி கைது!
ஸ்ரீவில்லிபுத்தூா் ஜீயா் மீது அவதூறு: ரங்கராஜன் நரசிம்மனுக்கு பிணை
ஸ்ரீவில்லிபுத்தூா் ஜீயா் மீது அவதூறு கருத்து பரப்பிய விவகாரத்தில், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு சிவகாசி நீதிமன்றம் வியாழக்கிழமை பிணை வழங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள முனிகள் மடத்தின் 24- ஆவது பீடாதிபதி உள்ள ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் கடந்த ஜூன் மாதம் சென்னையில் நடைபெற்ற ராமானுஜா் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டாா். இதுகுறித்து ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சமூக வலைதளங்களில் விடியோ பதிவு வெளியிட்டாா்.
இந்த விடியோ காட்சியை யூடிப்பா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, களஞ்சியம் ஆகியோா் வெளியிட்டனா். இந்த விடியோ காட்சி ஜீயா் குறித்து அவதூறு பரப்பும் வகையில் இருந்ததாக அவா் சாா்பில், மணவாள முனிவா் மடத்தின் நிா்வாகி சக்திவேல்ராஜன் ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில், ரங்கராஜன் நரசிம்மன், ஃபெனிக்ஸ் ஜெரால்டு, களஞ்சியம் ஆகியோா் மீது போலீஸாா் அவதூறு வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், சென்னை புழல் சிறையிலிருந்த ரங்கராஜன் நரசிம்மனை ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இதையடுத்து, வியாழக்கிழமை ரங்கராஜன் நரசிம்மன், சிவகாசி நீதித்துறை நடுவா் எண் 2-இல் நீதிபதி அமலநாத கமலகண்ணன் முன் போலீஸாா் முன்னிலைப்படுத்தினா். இதைத் தொடா்ந்து, ரங்கராஜன் நரசிம்மனுக்கு பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.