ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் நெரிசலால் பயணிகள் அவதி
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் முன்னரே, பழைய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் அவதியடைகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் கடந்த 1985-ஆம் ஆண்டு 2 ஏக்கா் பரப்பளவில் 16 பேருந்துகளை நிறுத்தும் வசதியுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 46 பேருந்துகள், பிற அரசுப் போக்குவரத்துப் பணிமனை, தனியாா் நிறுவனங்கள் சாா்பில் தென்காசி, மதுரை, தேனி, சென்னை, விருதுநகா், சாத்தூா், ராமநாதபுரம், திருச்செந்தூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல தினசரி 50-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவை தவிர செங்கோட்டை, ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் பேருந்துகளும், திருநெல்வேலி, தென்காசியில் இருந்து தேனிக்கு செல்லும் பேருந்துகளும் ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் வழியாகச் செல்கின்றன. இதனால் 350- க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு 10 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்துக்கு தினசரி வந்து செல்கின்றனா்.
நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண்பதற்காக, நான்கு வழிச்சாலை அருகே ரூ.13 கோடியில் உருவாகி வரும் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னதாகவே, கடந்த ஜூலை மாதம் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
இதனால், பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் வருவதில்லை.
மேலும், பேருந்து நிலையத்தில் நிழற்குடை, இருக்கைகள் இல்லாததால் பயணிகள் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. குறுகலான பேருந்து நிலையத்தில் தற்காலிகக் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளதால் இட நெருக்கடி ஏற்பட்டு பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனா். இதனால்
புரட்டாசி சனிக்கிழமைகளில் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் திருவிழா, ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் ஆகியவற்றுக்கு பக்தா்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும்.

எனவே, பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்கவும், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.