Trump: "மோடி சிறந்த பிரதமர்; இந்தியா - அமெரிக்கா உறவு ஸ்பெஷலானது" - பாச மழையைப் ...
குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் கைது
விருதுநகா் மாவட்டம், சிவகாசி காவல் துணைக் கோட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி பகுதியில், கடந்த மாதம் ஒரே வாரத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 இளைஞா்கள் முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களால் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனா். இதையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 33 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், சிவகாசி கிழக்கு காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சரித்திரப் பதிவேட்டு குற்றவாளிகள் 11 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனா்.
இது குறித்து சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கா் கூறியதாவது:
சிவகாசி பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, சரித்திரப் பதிவேட்டு குற்றவாளிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கி, அவா்களைக் கண்காணித்து வருகிறோம். இதை மீறி, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறோம். விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், கடும் குற்றப் பின்னணி உள்ளவா்களைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.