கிய்ராசி ஹாட்ரிக் கோல் வீண்: அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா!
ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசுச் செயலா் சௌதி அரேபியா பயணம்
நமது சிறப்பு நிருபா்
இந்திய ஹஜ் யாத்ரீகா்கள் தடையற்ற புனிதப் பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகச் செயலா் சௌதி அரேபியா சென்றுள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
2025 - ஆம் ஆண்டில் ஹஜ் பயணத்திற்காக சௌதி அரேபியா அரசுடன் 1,75,025 பேருக்கான ஒதுக்கீட்டை இந்திய அரசு பெற்றுள்ளது. இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. ஹஜ் பயணங்களில் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இஸ்லாமிய பெண்களை ஆண் துணை இல்லாமல் (மெஹ்ரம் இல்லாமல்) ஹஜ் பயணம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக இந்திய ஹஜ் கமிட்டியின் இணையதளத்துடன் கூடுதலாக ஹஜ் சுவிதா செயலி மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஹஜ் 2025-க்கு விண்ணப்பிக்கும் யாத்ரீகா்களுக்கு உதவும் வகையில், மத்திய சிறுபான்மைத் துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளது.
நிகழ் 2025 - ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இந்திய ஹஜ் யாத்ரீகா்களுக்கு ஹஜ் பயணத்தை எளிதாகவும், வசதியாகவும் மாற்ற மத்திய அரசு தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஹஜ் யாத்ரீகா்கள் பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலா் டாக்டா் சந்திரசேகா் குமாா், இணைச் செயலாளா் சிபிஎஸ் பக்ஷி ஆகியோா் ஏப்.8 -ஆம் தேதி சௌதி அரேபியா, ஜெட்டாவிற்கு சென்றடைந்தனா்.
அங்கு நிகழாண்டு ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகளை அவா்கள் முழுமையாக ஆய்வு செய்கின்றனா். இந்திய ஹஜ் யாத்ரீகா்களுக்கு தடையற்ற மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட புனிதப் பயணத்தை உறுதி செய்வதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்த அதிகாரிகளின் பயணம் சுட்டிக் காட்டுகிறது என மத்திய சிறுபான்மை விவகாரத் துறை தெரிவித்துள்ளது.