முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
ஹரியாணாவில் ஐஸ்கிரீம் விற்கும் பாக்., முன்னாள் எம்.பி.! இந்தியாவில் இருக்க அனுமதி!
பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. தபயா ராம், ஹரியாணாவில் ஐஸ்கிரீம் விற்று தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்.
இவரின் குடும்பத்தில் 34 உறுப்பினர்கள் உள்ள நிலையில், 6 பேர் மட்டுமே இந்தியக் குடியுரிமை பெற்றுள்ளனர். எஞ்சிய 28 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் நாடு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் எம்.பி.யான தபயா ராம் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவாரா? அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் நாட்டில் இருக்க அனுமதிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், உள்ளூர் காவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகு தபயா ராம் தனது குடும்பத்துடன் நாட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி தனது சொந்த ஊரான ஃபதேஹாபாத் மாவட்டத்திற்குட்பட்ட ரத்தன்கார் கிராமத்தில் அவர் எந்தவித அச்சமுமின்றி இனி இருந்துகொள்ளலாம்.
தபயா ராம் யார்?
இந்தியா - பாகிஸ்தான் பிளவுபடுவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபில் பிறந்தவர் தபயா ராம். மத அழுத்தம் காரணமாக அவரின் குடும்பத்தினர் அங்கேயே இருக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். ஆனால், கட்டாய மதமாற்றத்துக்கு அக்குடும்பம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 1988ஆம் ஆண்டு பாக்ஹர் மாவட்டத்தின் லோஹியா தொகுதியில் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
எம்.பி.யாக தேர்வானாலும் அவரின் பதவிக்காலம் மிகவும் நெருக்கடி மிகுந்ததாகவே இருந்தது. அதற்கு அவரின் தனிப்பட்ட குடும்ப பிரச்னையே காரணமாக இருந்துள்ளது. மதத்தை தீவிரமாக கடைபிடிக்கும் தபயாவின் குடும்பத்தினர் பெண்ணைக் கடத்தி அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதற்கு எதிராக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தை நாடிய தபயாவின் மனு நிராகரிக்கப்பட்டது.
ஏமாற்றம் மற்றும் அச்சத்தின் காரணமாக இவரின் குடும்பம் 2000ம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ளனர். உறவினர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஒரு மாத விசாவில் ஹரியாணா மாநிலம் ரோத்தக் பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் ரத்தன்கார் பகுதியில் நிரந்தரமாகக் குடிபெயர்ந்துள்ளனர்.
ஹரியாணாவில் தனது குடும்பமும் பெரிதாகிவிட்டதால், அதனை கவனித்துக்கொள்ள குல்ஃபி, ஐஸ்கிரீம் விற்கும் பணியில் தபயா இறங்கியுள்ளார். இவரின் 7 வாரிசுகளும் உறவினர்களையே திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துள்ளன.
தற்போது இவர் குடும்பத்தில் 34 பேர் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுவிட போராடுகிறார் தபயா. இந்தப் போராட்டத்தில் இரு பெண்கள் உள்பட 6 பேருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. எஞ்சிய 28 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
பாகிஸ்தானில் இவரின் இயற்பெயர் தேஷ்ராஜ். ஆனால் அபோதைய தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் அடையாள அட்டையில் இவரின் பெயர் தபயா ராம் என மாற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தேசிய பேரவை உறுப்பினர்கள் பட்டியலில் இவரின் பெயர் அல்ஹா தபயா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை 537 பேர்...
ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 22) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் தங்கள் நாட்டிற்குச் செல்ல வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. இதுவரை 537 பேர் அட்டாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.