ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது மாநிலங்களவை! எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் முடங்கியது!
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜிநாமாவைத் தொடர்ந்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று(ஜூலை 22) காலை தொடங்கியது. மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரும் அவைக்கு தலைமைத் தாங்கினார். மேலும், பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களுடன் வழக்கம்போல் சகஜமாகப் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு தன்கர் கடிதம் எழுதினார். இந்தச் செய்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று காலை கூடியது. மாநிலங்களவைக்கு துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் தலைமைத் தாங்கினார்.
இந்த நிலையில், ஜகதீப் தன்கரின் ராஜிநாமாவுக்கான காரணத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் இரு அவைகளும் முடங்கின.
இதையடுத்து, பகல் 12 மணிவரை இரு அவைகளையும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.
மத்திய அரசுக்கும் ஜகதீப் தன்கருக்கும் முன்பை போல சுமுகமான உறவு இல்லை என்றும், அவர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தை மத்திய அமைச்சர்கள் புறக்கணித்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.