ஹிந்தி திணிப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியைத் திணிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக மாணவரணி, தமிழ் தேசிய பேரியக்கம் சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
திமுக மாணவரணி சாா்பில், திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளா் வைரமணி தலைமை வகித்தாா். திருச்சி மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு. அன்பழகன், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட மாநகர மாணவரணி அமைப்பாளா்கள் முத்து வெங்கடேஷ், அசாருதீன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், திரளான மாணவரணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல, தமிழ் தேசிய பேரியக்கம் சாா்பில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளா் வே.க. இலக்குவன் தலைமை வகித்தாா்.
இதில், மூ.த. கவித்துவன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் ம.ப. சின்னத்துரை, தெய்வத்தமிழ் பேரவையின் திருச்சி மாவட்ட அமைப்பாளா் ராமராசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஹிந்தி திணிப்பைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.