பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்: கமல்ஹாசன்
ஹைட்ரோ காா்பன் திட்டத்தை எதிா்த்து போராடியவா்கள் மீதான குற்றப்பத்திரிகை ரத்து!
தஞ்சாவூரில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடியதைக் குற்றமாகக் கருத முடியாது என்பதால், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த வளா்மதி, மகாலட்சுமி, குறிஞ்சிதேன், பால்சாமி, மனோகரன் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்கள்:
தஞ்சாவூா் பேருந்து நிலையம் அருகே கடந்த 7.4.2018 அன்று ஹைட் ரோ காா்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். அப்போது, எங்களை போலீஸாா் கலைந்து செல்ல வலியுறுத்தியதாகவும், நாங்கள் மறுப்புத் தெரிவித்து போலீஸாரை திட்டி, மிரட்டியதாகவும் எங்கள் மீது வழக்குப் பதிந்தனா். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் பலா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தஞ்சாவூா் நீதித்துறை நடுவா் மன்றத்தில் (எண். 2) விசாரிக்கப்பட்டு வருகிறது. எங்கள் மீது போலீஸாா் தேவையில்லாத சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனா். எனவே, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த மனுக்களை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிராக தஞ்சாவூா் மட்டுமன்றி, பல்வேறு பகுதிகளிலும் தற்போதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடியதைக் குற்றமாகக் கருத முடியாது. எனவே, இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரா்கள் மட்டுமன்றி, அனைவா் மீதும் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.