Adani - Sabareesan சந்திப்பு? ஒரேநாடு ஒரேதேர்தலுக்கு Kalaingar ஆதரவு? DMK தமிழன்...
1,26,000 ஊழியர்கள்; 12 பில்லியன் டாலர் டர்ன் ஓவர்; பஹ்ரைன் அரசின் உயரிய விருதைப் பெற்ற இந்தியர்
பஹ்ரைன் அரசின் உச்சபட்ச 'செயல்திறன் விருதை' ( Medal of Efficiency) அந்த நாட்டு அரசு இந்திய தொழிலதிபர் டாக்டர் ரவி பிள்ளைக்கு வழங்கியிருக்கிறது. இந்த விருதைப் பெற்ற ஒரே வெளிநாட்டவர் இவர் தான் என்ற பெருமையும் இவரை சேர்ந்துள்ளது.
நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இவர் செய்த பங்களிப்பைப் பாராட்டி பஹ்ரைன் அரசு ரவி பிள்ளைக்கு இந்த விருதை வழங்கி உள்ளது.
கடந்த டிசம்பர் 16-ம் தேதி, பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபா ஆர்.பி குழுமத்தின் தலைவர் ரவி பிள்ளைக்கு செயல்திறன் விருதை வழங்கி கௌரவித்தார்.
"ரவி பிள்ளையின் சிறப்பான சேவை மற்றும் நாட்டுக்கு அவர் அளித்துள்ள பங்களிப்புகளை நாங்கள் பாராட்டுகிறோம். எங்கள் ஆழ்ந்த நன்றியுணர்வின் அடையாளமாக அவருக்கு இந்த சிறப்பான விருதை வழங்குவதில் பெருமை கொள்கிறோம்" என்று அரச பிரகடனத்தில் மன்னர் குறிப்பிட்டுள்ளார்.
"சுத்திகரிப்பு நடவடிக்கைகள், உள்ளூர் சமூக மேம்பாடு மற்றும் பஹ்ரைனின் உலகளாவிய நிலையை வலுப்படுத்துதல் ஆகிய துறைகளில் டாக்டர் பிள்ளையின் சிறந்த பங்களிப்புகளுக்கான பாராட்டுகளை இந்த மதிப்பிற்குரிய விருது பிரதிபலிக்கிறது" என்று அந்த நாட்டின் ராயல் ஆர்டர் குறிப்பிட்டுள்ளது.
சுமார் 12 பில்லியன் டாலர் டர்ன் ஓவரை கொண்ட இவரின் நிறுவனம், இந்தியாவுக்கு வெளியே உள்ள இந்தியர்களுக்கு பணி அளிக்கும் மிகப்பெரிய வணிக நிறுவனமாக இயங்கி வருகிறது. 1,26,000 ஊழியர்களைக் கொண்ட இவரது குழுமம் இந்தியாவுக்கு வெளிநாட்டு நாணயங்களை அதிக அளவில் அனுப்பும் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.
ஆறு நட்சத்திர ஹோட்டல்கள், இரண்டு மருத்துவமனைகள் மற்றும் மூன்று வணிக வளாகங்களை இந்தியாவில் கொண்டுள்ள இவர் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவர். இவர் இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"இந்த விருது எனது குழுவின் கூட்டு முயற்சி, பஹ்ரைன் மக்களின் ஆதரவு மற்றும் அரசின் நம்பிக்கை ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும். இத்தனை வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருந்த அத்தனை கடின உழைப்பாளி ஊழியர்களுக்கும் இந்த விருதை சமர்பிக்கிறேன். மேலும், அனைத்து இந்தியர்களுக்கும் குறிப்பாக வளைகுடாவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன்" என்று விருதை குறித்து ரவி பிள்ளை பகிர்ந்துள்ளார்.