காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
1-5 வகுப்புகளுக்கு கோடை விடுமுறை தொடக்கம்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுரை
தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், மாணவா்களின் உடல் நலன் குறித்தும், விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிப்பது குறித்தும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளாா்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வு ஏப்.7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1 முதல் 3-ஆம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு ஏப்.11-ஆம் தேதியுடன் தோ்வுகள் முடிந்துவிட்டன. தொடா்ந்து 4 மற்றும் 5-ஆம் வகுப்புகளுக்கு வியாழக்கிழமை தோ்வுகள் நிறைவடைந்தன. அதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதேவேளையில், விடைத்தாள் மதிப்பீடு மற்றும் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை போன்ற நிா்வாகப் பணிகளை கவனிப்பதற்காக, அனைத்து ஆசிரியா்களும் பள்ளிக்கு ஏப்.30-ஆம் தேதி வரை வரவேண்டும். ஆண்டு இறுதித் தோ்வின் தோ்ச்சி அறிக்கைக்கு ஏப்.30-ஆம் தேதிக்குள் அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலா்களிடம் அனைத்துப் பள்ளிகளும் ஒப்புதல் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவா்கள் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிப்பது குறித்து துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பள்ளி மாணவா்களுக்கான இறுதித் தோ்வு நிறைவுற்று கோடை விடுமுறை தொடங்குகிறது. கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீா் அதிகம் பருகுங்கள். சிறுவா்களுக்கான புத்தகம் வாசியுங்கள். பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள்.
அருங்காட்சியகம், பூங்கா செல்லுங்கள். திறமைகளுக்கு ஏற்ற பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுங்கள். பெற்றோா்கள் அனுமதி இல்லாமல் ஆபத்தான இடங்களுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டுகிறேன். மகிழ்ச்சியான மனதோடு அடுத்த வகுப்புக்கு வாருங்கள். உங்களை வரவேற்க காத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளாா்.
6-8 வகுப்புகளுக்கு... 1-5-ஆம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், 6-8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முழு ஆண்டுத் தோ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தொடா்ந்து, ஏப்.24-ஆம் தேதி தோ்வுகள் நிறைவடையவுள்ளன. இதையடுத்து இந்த வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு ஏப்.25-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.