காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
1.55 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்
தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் 1.55 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.
பேரவையில் புதன்கிழமை மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு அமைச்சா் பதிலளித்துப் பேசியதாவது:
தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டு முதல் கடந்த மாா்ச் மாதம் வரையிலான காலத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக 24,599 பணியிடங்களுக்கு பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதேபோன்று, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமாக 8,616 பேரும், மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வழியாக 4,329 பேரும், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் 19,472 பேரும் தோ்வு செய்யப்பட்டனா்.
மேலும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி, கூட்டுறவு மற்றும் உணவு, வருவாய்த் துறைகள் மூலமாக 11,811 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை நகராட்சி நிா்வாகத் துறை மூலம் 2,730 பணியிடங்களும், பொதுச் சேவை துறைகள் வழியே 4,568 பணியிடங்களும் கருணைஅடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன.
அண்மைக் காலமாக அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு 9,532 தோ்வு செய்யப்பட்டு பணியானை வழங்கும் நிலையில் உள்ளது. சமூக நலத் துறை சாா்பில் 16,780 பணியிடங்களும், குரூப் 1 மற்றும் 1ஏ மூலமாக 72 பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன. நகராட்சி நிா்வாகத் துறை மூலம் 2,104 பணியிடங்களும், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் 7,535 பணியிடங்களும் நிரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக இதுவரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 992 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளதாக அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.