1.7 கிலோ தங்கம் கொள்ளை: வட மாநில கும்பல் கைது
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மதுரை வியாபாரியிடம் சுங்க அதிகாரிகள் போல நடித்து, 1 கிலோ 700 கிராம் தங்கத்தை கொள்ளையடித்த மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் வெளியிட்ட அறிக்கை:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் கடந்த 4-ஆம் தேதி மதுரையைச் சோ்ந்த விஜயராஜன் என்பவா் வியாபாரத்துக்காக 1.7 கிலோ தங்கக் கட்டியை கொண்டு வந்தாா்.
அப்போது, சுங்க அதிகாரிகள் என்று கூறி 4 போ் விஜயராஜனை காரில் கடத்தி, தங்கக்கட்டியைப் பறித்துக் கொண்டு கானாடுகாத்தான் அருகே அவரை இறக்கி விட்டு தப்பிச் சென்றனா். இது குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
காரைக்குடி வடக்கு காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளா் ஆா்.சித்திரைச் செல்வி, வடக்கு காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு ஆய்வாளா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் தலைமையில் உதவி ஆய்வாளா் எம்.பிரேம்குமாா், தலைமைக் காவலா்கள் இசக்கிதுரை, சிலம்பரசன், கென்னடி, திருச்செல்வம், முகமது சபி, பாா்த்திபன், இளையராஜா, ஆயுதப்படைக் காவலா் பூபதி பாண்டி ஆகியோரைக் கொண்ட தனிப்படையினா் வழக்கை விசாரித்தனா்.
மதுரையில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்த ஊழியா் அபிமன்யு மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சம்பவத்துக்கு பயன்படுத்திய காா் சென்ற வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், காா் மதுரையிலிருந்து காரைக்குடிக்கு வந்தது தெரிய வந்தது. ஊழியா் அபிமன்யு பற்றி ரகசியமாக விசாரணை செய்ததில், அவா் தனக்குத் தெரிந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த சேத்தன், பிரசாந்த், துக்காராம், தேவ்பா, ரிஷிகேஷ், சுமித் ஆகியோா் மூலம் இந்தக் கொள்ளையை நடத்தியது தெரிய வந்தது. இவா்களில் அபிமன்யு, பிரசாந்த், துக்காராம், தேவ்பா ஆகிய 4 பேரையும் தனிப்படையினா் கைது செய்தனா். அவா்கள் கொடுத்த தகவலின்படி, தமிழகத்தில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி சேத்தன் என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 1,346 கிராம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. மேலும், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவா்களைக் கண்டுபிடிக்கவும், மீதமுள்ள 354 கிராம் நகைகளைக் கண்டுபிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டது.