இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!
அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு
சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொல்லப்பட்ட வழக்கில் தனிப்படை காவலா்கள் 5 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
இந்த வழக்கில் ஏற்கெனவே அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா், சாட்சிகள் சக்தீஸ்வரன், ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா், காவலாளி பிரவீன்குமாா் ஆகியோா் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கேட்டு சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அடங்கிய நிலைக் குழுவிடம் முறையீடு செய்தனா். இதையடுத்து, அவா்களது வீடுகளுக்கு தினமும் ரோந்து போலீஸாா் சென்று கண்காணித்து வருகின்றனா்.
இதேபோல, அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞா் காா்த்திகைராஜா, தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பாதுகாப்பு கேட்டு நிலைக்குழுவிடம் அண்மையில் முறையீடு செய்தாா்.
இதையடுத்து, ரோந்து போலீஸாா் தினமும் அவரது வீட்டுக்குச் சென்று கண்காணிக்க வேண்டும். அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். வழக்கு தொடா்பான எதிரிகள், வழக்குரைஞா் காா்த்திகைராஜாவை நேரில் சந்திக்க அனுமதிக்கக் கூடாது என மாவட்ட முதன்மை நீதிபதி கே. அறிவெளி திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.