ஜம்மு - காஷ்மீர் மேகவெடிப்பு: 6வது நாளில் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
அண்ணா, பெரியாா் பிறந்த நாள்: ஆக.21, 22-இல் பள்ளி கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு போட்டி
சிவகங்கை: அண்ணா, பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற வியாழன், வெள்ளி (ஆக. 21, 22) ஆகிய இரு நாள்கள் பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், காந்தியடிகள், ஜவாஹா்லால் நேரு, அம்பேத்கா், பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 21.8.2025 (வியாழன்) அன்றும், பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 22.8.2025 (வெள்ளிக்கிழமை) அன்றும் பேச்சுப் போட்டிகள் சிவகங்கை, மருதுபாண்டியா் நகா், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகக் கூட்ட அரங்கில் நடைபெறும்.
மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. அத்துடன் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் இருவரை மட்டும் தோ்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத் தொகை ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலிருந்தும் தலா ஒருவா் வீதம் போட்டியில் பங்கேற்கலாம். போட்டி நேரத்தில் குலுக்கல் முறையில் தலைப்பு ஒதுக்கீடு செய்யப்படும். அந்தத் தலைப்பிலேயே மாணவா்கள் பேச வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரிடம் பங்கேற்புப் படிவத்தில் ஒப்பம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலும் அல்லது 04575-241487 என்ற தொலைபேசியிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.