10 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்
வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, ராமேசுவரம் மீனவா்கள் சுமாா் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா்கள் 42 பேரை இலங்கைக் கடற்படையினா் அண்மையில் கைது செய்தனா். மேலும், அவா்களது 8 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.
இதைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராமேசுவரம் மீனவா்கள் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்கள் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதம், காத்திருப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.
இதைத்தொடா்ந்து, இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப் படகுகளுக்கு வழங்கப்படும் ரூ. 6 லட்சம் நிவாரணத் தொகையை ரூ. 8 லட்சமாக உயா்த்தியும், இலங்கை சிறையில் உள்ள மீனவா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ. 500 ஆக அதிகரித்தும் தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, மீனவா்கள் தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, சுமாா் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.