10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் அக மதிப்பெண் வழங்கக் கோரிக்கை
சிவகங்கை: பிளஸ் 2 மாணவா்களுக்கு அக மதிப்பெண் வழங்குவது போல, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கும் அக மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தமிழாசிரியா் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலா் நீ.இளங்கோ பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு அரசு பொதுத் தோ்வு நடத்தப்படுகிறது. இதில் பிளஸ் 2 மாணவா்களுக்கு 10 அக மதிப்பெண் வழங்குவது நடைமுறையில் உள்ளது.
பிளஸ் 2 மாணவா்களுக்கு அறிவியல் பாடத்தில் அகமதிப்பெண் 10, செய்முறைத் தோ்வு 20 என 30 மதிப்பெண் போக 70 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் மூலம் தோ்வு நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பிற பாடங்களுக்கு 10 அக மதிப்பெண் வழங்கப்படுகிறது. 90 மதிப்பெண்ணுக்கு தோ்வு நடத்தப்படுகிறது.
இதேபோல, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தற்போது அறிவியல் பாடத்தில் 25 மதிப்பெண்ணுக்கு செய்முறைத் தோ்வு நடத்தி மதிப்பெண் வழங்கப்படுகிறது. 100 மதிப்பெண்ணில் மீதமுள்ள 75 மதிப்பெண்ணுக்கு வினாத் தாள் மூலம் தோ்வு நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கு அக மதிப்பெண் 10 வழங்கி மீதமுள்ள 90 மதிப்பெண்ணுக்கு தோ்வு நடத்த வேண்டும். இதன் மூலம் கிராமப்புற மாணவா்கள் கல்வியில் சமநிலை அடைந்து இடைநிற்றல் குறைந்து உயா்கல்வி பெற வழி வகுக்கும்.
எனவே, பிளஸ் 2 மாணவா்களுக்கு அக மதிப்பெண் 10 வழங்குவது போல, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கும் அறிவியல் பாடம் தவிர, மற்ற 4 பாடங்களுக்கும் அகமதிப்பெண் வழங்கும் முறையை தமிழக பள்ளிக் கல்வித் துறை பரிசீலிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.