மனித-விலங்கு மோதல்: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க திட்டமில்லை: மத்திய அ...
10-ஆவது நாளாக யேமனில் அமெரிக்கா தாக்குதல்
யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா்.
ஏவுகணை படைப் பிரிவின் தலைவா் உள்பட ஹூதி கிளா்ச்சிப் படையின் தலைவா்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளாா்.
காஸாவில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுவரும் போரில், ஈரானின் நிழல் ராணுவமான ஹூதி கிளா்ச்சிப் படையினா் ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டனா்.
இஸ்ரேல் தொடா்பான கப்பல்களை மட்டுமே தாக்குதவதாக அவா்கள் கூறினாலும், இதனால் சா்வதேச கடல் வா்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதையடுத்து, யேமனில் ஹூதி இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்தின.
இந்த நிலையில், காஸாவில் கடந்த ஜன. 19 முதல் போா் நிறுத்தம் அமலில் இருந்ததால் ஹூதி கிளா்ச்சியாளா்களும் செங்கடலில் தங்களின் தாக்குதலை நிறுத்திவைத்திருந்தனா். ஆனால் அந்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடா்ந்து தங்கள் தாக்குதலை ஹூதிக்கள் மீண்டும் தொடங்கினா்.
இதன் காரணமாக, யேமனில் ஹூதி படையினரை குறிவைத்து அமெரிக்கா கடந்த 15-ஆம் தேதி முதல் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.