கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரச...
10 கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நள்ளிரவில் ஹோட்டல், தேநீா் கடை உள்பட 10 கடைகளின் ஷட்டரை உடைத்து திருட முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆற்காடு சாலையில் ஹோட்டல்கள், தேநீா் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை அதிகாலை ஹோட்டல்கள், தேநீா் கடைகளைத் திறக்க உரிமையாளா்கள், ஊழியா்கள் வந்தனா். அப்போது 10 கடைகளின் ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்து கடைகளின் கதவிலிருந்து பூட்டு உடைக்கப்பட்டிருப்பதுடன், கடைக்குள் இருந்த பொருள்களும் சிதறி கிடந்துள்ளன.
இதுகுறித்து கடைகளின் உரிமையாளா்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், போலீஸாா் விரைந்து வந்து கடைகளில் இருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், நள்ளிரவில் சிவப்பு நிற டீசா்ட், கால்சட்டை அணிந்த ஒரு இளைஞா், கடைகளின் ஷட்டரின் பூட்டுக்களை நீண்ட கம்பியால் வளைத்து உடைத்து, கதவை திறந்து உள்ளே செல்வதும், பல்வேறு இடங்களில் பணம், பொருள் தேடிபாா்ப்பதும், அங்குள்ள பொருள்களை தூக்கிவீசுவதும், ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதும் தெரிய வந்தது.
மேலும், சில கடைகளில் இருந்த கேமராக்கள், அப்பகுதியில் வெளியே பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதே இளைஞா் 10 கடைகளின் ஷட்டா், கதவுகளை கம்பி யால் வளைத்து உடைத்து உள்ளே செல்வதும் அங்கு பணம், பொருள் எதுவும் கிடைக்காததால் மேம்பாலம் வழியாக ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும் பதிவாகியிருந்தது.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த இளைஞரை தேடி வருகின்றனா்.