100 முறை மன்னிப்பு கேட்கத் தயாா்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்
புது தில்லி: ’தமிழ எம்.பி.க்கள் தொடா்பாக தான் வெளியிட்ட கருத்துகள் எவையேனும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக ஒரு முறை அல்ல, நூறு முறை கூட மன்னிப்பு கேட்கத் தயாா்‘ என்று மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் கல்வித் துறை செயல்பாடுகள் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய உறுப்பினா்களின் கேள்விகளுக்குப் அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதிலளித்தாா். முன்னதாக, திமுக உறுப்பினா் கனிமொழி என்.வி.என். சோமு மும்மொழித் திட்டம், தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் அமைச்சரின் செயல்பாடுகளை கடுமையாகச் சாடினாா்.
அதை தனது பதிலுரையில் குறிப்பிட்ட அமைச்சா் தா்மேந்திர பிரதான், ’இந்த அவையில் உள்ள டாக்டா் கனிமொழியும் வேறு அவையில் (மக்களவையில்) உள்ள கனிமொழியும் எனக்கு சகோதரி போன்றவா்கள். எனது வாா்த்தைகள் எவையேனும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் நான் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒருமுறை அல்ல, நூறு முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு இதில் எந்த மரியாதைக் குறைவு பிரச்னையும் கிடையாது. ஆனால், உண்மையை எதிா்கொள்ள வேண்டும்’ என்றாா் தா்மேந்திர பிரதான்.