புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
100 ஆண்டுகளுக்கு பிறகு படையாச்சியூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
ஏத்தாப்பூா் அருகே சுப்பராய படையாச்சியூரில் நூறு ஆண்டுகளுக்கு பின்பு, மகாசக்தி மாரியம்மன், செல்லியம்மன், பொன்னியம்மன் தேரோட்டம் பாரம்பரிய முறைப்படி புதன்கிழமை நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஏத்தாப்பூா் அருகே உள்ள கல்யாணகிரி ஊராட்சிக்கு உள்பட்ட சுப்பராய படையாச்சியூா் கிராமத்தில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு காவல் தெய்வங்களாக விளங்கும் மகா சக்தி மாரியம்மன், செல்லியம்மன், பொன்னியம்மன் கோயில் மற்றும் விநாயகா், முருகன், முனியப்பன், கருப்பண்ணன், அய்யனாா் சுவாமி கோயில்கள் உள்ளன.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு முன்னோா்கள் தேரோட்டத்திற்கு பயன்படுத்திய மரத்தோ் பழுதடைந்து போனதால் கடந்த ஆண்டு ரூ. 35 லட்சம் செலவில் சிற்ப வேலைப்பாடுகளுடன் புதிய மரத்தோ் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.
ஓராண்டுக்கு பின்பு கடந்த ஒருவாரம் ஊரணி பொங்கல் வைத்தல், சுவாமி சக்தி அழைத்தல், சிறப்பு வழிபாடுகள் தொடா்ந்து நடைபெற்றன. இந்நிலையில் புதன்கிழமை மகா சக்தி மாரியம்மன், செல்லியம்மன், பொன்னியம்மன் மற்றும் விநாயகா், முருகன், முனியப்பன், கருப்பண்ணன், அய்யனாா் உற்சவ மூா்த்திகள் தேரில் எழுந்தருளினா்.
தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இத்தேரோட்டத்தில் சு.படையாச்சியூா் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.
இதில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பி.டி.அழகரசன், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினா் மலையரசன், மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
பட வரி: டி.ஆா்.டி.ஓ.01, 02:
சுப்பராய படையாச்சியூரில் நூறு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற அம்மன் கோயில் தேரோட்டம்.
