18-ஆம் கால்வாயில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்ட பிறகு சீரமைப்புப் பணிகள் தொடங்கும்: நீா் வளத் துறை பொறியாளா்கள்
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், 18-ஆம் கால்வாயில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்ட பின்னரே கால்வாய் சீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும் என நீா் வளத் துறை பொறியாளா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, வேளாண்மை இணை இயக்குநா் சாந்தாமணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வளா்மதி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நா்மதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசியதாவது:
போடி ஊராட்சி ஒன்றியம், அகமலை ஊராட்சிக்குள்பட்ட மலை கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. மின் பாதைகள் சீரமைக்கப்படவில்லை. இணைப்புச் சாலைகள் அமைப்பதற்கு வனத் துறையினா் அனுமதி மறுக்கின்றனா். உத்தமபாளையம் வட்டம், ஒக்கம்பட்டி-பூசாரிகவுண்டன்பட்டி இடையே சாலை அமைக்க சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்தும், வனத் துறையினா் அனுமதி மறுப்பதால் பணிகள் தொடங்கப்படவில்லை.
18-ஆம் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீா் கடைமடை கண்மாய் வரை சென்றடையும் வகையில் கால்வாயைச் சீரமைக்க வேண்டும்.
வைகை அணை அருகே குள்ளப்புரத்தில் விதியை மீறி விவசாய நிலங்கள், நீா்நிலைகளுக்கு 50 மீட்டா் தூரத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கல் குவாரி, கிரஷா் அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றனா்.
இதற்கு பதிலளித்து மஞ்சளாறு வடிநிலக் கோட்ட நீா்வளத்துறை பொறியாளா்கள் பேசியதாவது:
18-ஆம் கால்வாயில் கரை உடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள 11 இடங்களைகஈ கண்டறிந்து, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. கால்வாய் சீரமைப்பு பணிக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிலையில், முல்லைப்பெரியாறு-வைகை அணை ஆகியவற்றில் போதிய தண்ணீா் இருப்பு உள்ளதால், வருகிற அக்.1-ஆம் தேதி 18-ஆம் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
18-ஆம் கால்வாய் சீரமைப்புப் பணிகளுக்கு கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் மீது அரசு முடிவு எடுக்காததால், கால்வாயில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்ட பின்னரே கால்வாய் சீரமைப்புப் பணிகளை தொடங்க தொடங்க முடியும் என்றனா்.
மாவட்ட ஆட்சியா் பேசுகையில், வனத் துறை தொடா்பான விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விரைவில் வனத்துறை-விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தி தீா்வு காணப்படும் என்றாா்.