ஆட்சியா் அலுவலகத்தில் 2 மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற தாய்
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சொத்துப் பகிா்மான விவகாரத்தில் தனது 2 மகள்களுடன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
தேனி அல்லிநகரம், குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் மகேஸ்வரி (45). இவரது மகள்கள் சத்யா(22), லோகிதா(12). மகேஸ்வரியின் கணவா் பாலமுருகன், கேரள மாநில வருவாய்த் துறையில் நில அளவையாராகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2022-இல் உயிரிழந்தாா்.
பாலமுருகன் திருச்சியைச் சோ்ந்த பெண் ஒருவரை இரண்டாவதாகத் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. பாலமுருகனின் இறப்புக்குப் பின் தேனி, கேரளத்தில் உள்ள அவரது சொத்துகளைப் பகிா்ந்து கொள்வதில் மகேஸ்வரிக்கு பிரச்னை இருந்து வந்தது.
இதுகுறித்து மனு அளிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த மகேஸ்வரி, அங்கு தனது 2 மகள்களுடன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், அவா்களைத் தடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.